சனி, 21 ஜனவரி, 2023

 கடற்கரை  ஓரம்    காதல் பண்பாடு  - கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்  -  ஒவ்வொரு  தமிழரும்  அறிந்து வைத்திருக்கவேண்டிய  பாடல் . 


கடற்கரை மணலில் தோழியருடன் விளையாடும்போது, மணலுக்குள் புன்னங்கொட்டையை மறைத்து விளையாடினோம். அதனை எடுக்காமல் மறந்து சென்றுவிட்டோம். அது முளைத்துக்கொண்டது. அதற்குப்  பாலை  ஊற்றி வளர்த்துவந்தேன். இப்போது அது மரமாக நிற்கிறது. அது உனக்கு நுவ்வை (உனக்கு தங்கையானவள் ) ஆகும் என்று அம்மா  சொல்லிவிட்டாள்.  


 அதன் கீழே  நீ  சிரித்துக்கொண்டு காமச்சேட்டை  செய்து  விளையாடுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. புன்னை மரம்  என் தங்கையையொத்தது. அதுபார்க்க அதன்  கீழே அமர்ந்து உன்னோடு எப்படி காதல் உறவாட முடியும்?  நீ என்னுடன் காதல்  சேட்டை  செய்து  விளையாடுவதாகில்,  வேறு  நிறைய  மர  நிழல்கள் உண்டு  அங்கே  செல்லலாமே .. .


ஆயம்  = தோழியர் கூட்டம் 


காழ்  =  புன்னங்கொட்டை 


முளை = முளைத்து 


அகைய =   வளர 


நெய் பெய் தீம்பால் = பசு பெய்த இனிய பால்


நுவ்வை = தங்கை


இலங்கு நீர்த்துறை கெழு கொண்க = நீர்நிலை பொருந்திய நெய்தல் நிலத்தலைவன்


விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப =  விருந்தில்  இசைஞர்கள்  மெல்லிய  இசை  இசைக்க 


வலம்புரி வான் கோடு நரலும் =  வலம்புரிச் சங்கின் ஒலியும் 


பாடல் – நெய்தல் நிலம்  - நற்றிணை  172


"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி


மறந்தனம் துறந்த காழ் முளை அகைய


நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப


நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று


அன்னை கூறினள் புன்னையது நலனே


அம்ம நாணுதும் நும்மொடு நகையே


விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப


வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்


துறை கெழு கொண்க நீ நல்கின்


இறைபடு நீழல் பிறவுமார் உளவே"

புதன், 24 நவம்பர், 2021

 ஒரு காலத்தின் வாழ்வியல் இலக்கியமாகிறது. இலக்கு என்ற பனையோலையில் எழுதியதாலேயே, அதை இலக்கியம் என்றார்கள் நமது முன்னோர்கள் . உண்மையான வாழ்வியலை எழுதுகையில் நம்முடன் சேர்ந்த தோழர்களின் பெயர்களைக் குறித்தே ஆகவேண்டிய நிலை உண்டாகுகிறது. அதனால் எனது பெயரை ஏன் எழுதினாய் என்று கோபம் கொள்ள வேண்டாம் அன்பர்களே, நண்பர்களே. கற்பனையான கதையாகில் வேறு பெயர்களைக் குறிப்பிடலாம்.

நினைவில் நிலைத்த நேரங்கள்
############################################
சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன், எத்தனை மழையைக் கண்டேன் , எத்தனை மரங்களின் நிழல்கள், எத்தனை அழகுகள், என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குடிக்க குளிர்ச்சியான நல்லதண்ணீர்க் கிணற்று நீர், வாயில் கொறிக்க விளாங்காய், கொய்யாக்காய், மாங்காய், நெல்லிக்காயென காய்களும் கனிகளுமாக, பெடியர்கள் நாம் ஊர்ச்சுற்றி மகிழ்ந்த காலமது.
.அம்மன்கோயில் அமைதியும், வீசும் கடற்காற்றும், ஆலமர நிழலும் அழகிய பெடியர்களின் சிரிப்பும், சேட்டைகளும், கேலிகளும், கிண்டல்களும், கோபமும், அடிபாடும், பின் நேசமுமாக என்னவொரு அருமையான காலம். இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை மிக்க காலமது.
அதோ ! பேரழகன் சிறிது நேரத்தில் மதியழகன் பிறகு சபாவும், பகீரதனும், மனோகரனும், நேசகாந்தனும், அருமுருகுவும், திருமுருகுவும். தேவராசாவும் வருகின்றார்கள். சந்தைக் கட்டில் கூடி, பலதும் பற்றிக் கதைத்து, கேள்விகள் கேட்டு, நொடிகள் அவிழ்த்து, எம்ஜிஆர் - சிவாஜி பற்றிக் கதைத்து குதூகலிக்கையில், உறவினர்கள், பெரியவர்கள் வரவே, மௌனமாகி நடிக்க - படிப்புமில்லை, பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று பேச்சு வாங்கிக் கொண்டே ஓடி ஒளித்தகாலமது . செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் உயிர் நடுங்கவே, பயத்தில் ஓடி ஒளிந்தோம். கறுப்பாய் இருக்கும் கன்னங் காதை தனது கரத்தால் சிவப்பாக்கும் திறமை கொண்டவர் அவர். எங்களுக்கு வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் யாவும் அவரே அன்று.
பெடியர்கள்நாம் ஈச்சங்காட்டுக்கு நடை யெடுக்க, அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப் போகினம்" சனி, ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே >> என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட , நாம் சிரித்தபடி ஓட்டமெடுக்க, எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் சென்று நுழைவோம். அங்கே நமக்கு எந்த முக்கிய வேலையும் இல்லை. ஊரார் கண்களிலிருந்து தூர இருந்தோம். அச்சமின்றி ஆனந்தமாகக் கதைக்க முடிந்தது, சத்தமாகப் பாடமுடிந்தது.
பசுமையான வயல்கள் , ஆங்காங்கே மேயும் பசுமாடுகள், புதர்களுக்குமேல் பறக்கும் குருவிகள், செண்பகங்கள், கிளிகள், காகங்கள், விட்டு விட்டு பறக்கும் மைனாக்கள், மரங்கொத்திகள், அண்டங்காகங்கள், உழைக்கும் தோட்டக்காரர்கள், கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் காய்ச்ச எரித்த தடயமாக இருக்கும் சாம்பலும், பெயர் தெரியாத இனிக்கும் சிறிய பழங்கள், நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள், முரிந்து கிடக்கும் மரங்கள், நெஞ்சை நிமிர்த்தி உயர்ந்து நிற்கும் பனைமரங்கள் ஆகா ஆகா என்ன அழகிய காட்சிகள். நாம் இயற்கையுடன் ஒன்றியிருந்த அந்த நாட்கள் இன்பக்கணங்கள் என்று அன்று புரியவில்லை. புழுதிப் பூக்களுடன் உருண்டு புரண்டு விளையாடினோம் வாழ்வின் பாரங்கள் அறியாத வயதது.
ஈச்சங்காட்டுக்கு வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம். அவன்மீது அச்சம் கொண்டிருந்த போதிலும் சற்று தைரியமும் இருந்தது. காரணம் அவன் எங்களைத் தொட்டால், அதை வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லவே அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால் சிறு தெம்பு நினைப்புக்குள் ஊர்ந்தது.
வெள்ளையன் ஒரு முரடனாம், மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து சாக்காட்டிப் போட்டவனாம் என்று காற்றுடன் பரவியிருந்தது கதை. அதுமட்டுமல்ல பெண்சாதியை கத்தியால் வெட்டி இரண்டு துண்டாக்கியவனாமெனவும் கதை கசிந்த காலமது. உண்மை தெரியாது உலாவிய கதைகளவை - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்துப் பகிர்ந்து உண்டோம் - உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது, துணிவும், சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்த வயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் .
பிற்பகல் பாரதி பாடியபடி, பாரதி விளையாட்டுக்கழகம், ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு - விளையாட்டுக் கழக நிதிக்காக, பாடசாலைக்கு கல்லறுத்தார்கள், வீடியோப் படக்காட்சி நடத்தினார்கள். அதன் விளைவாக, கழகத்துக்கு சீருடை (ஜேசி) வாங்கப்பட்டது. அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம். உறவினர் ஒருவரின் வளவில், பாயாசம் காய்ச்சி குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது.
பந்து பந்து , பூட்ஸ் பூட்ஸ், ஓட்டம் ஓட்டம், அடி அடி, கோல் கோல் - பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர். ஊக்குவிப்பார் இன்றி வளர்ந்த கழகம். சில காரணங்களால் பெயர் மாறியது றோயல் விளையாட்டுக் கழகமென. அக்கழகம் பெரிதாக உருவான கதை தனிக்கதை.
நாங்கள் விளையாடச் சென்ற ஊர்கள் எனது ஞாபகத்துக்கு எட்டியவரை, சுழிபுரம், காங்கேசன்துறை, மாதகல், இளவாலை, காரைநகர், தோப்புக்காடு, ஊர்காவற்றுறை , ஆனைக்கோட்டை, , சுன்னாகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானம் , யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, வவுனியா மாநகர சபை விளையாட்டரங்கு , அராலி மாவத்தை மைதானம் (பல தடவைகள்), வட்டுக்கோட்டை மாதாங்கோயிலடி மைதானம் , வட்டு/ யாழ்ப்பாணக்கல்லூரி மைதானம் , நாவாந்துறை, அளவெட்டி, மானிப்பாய் - இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் கழகத்துக்கு விளையாட மைதானமில்லை, வயல்கள், சிறிய சந்தை வளவு, வெற்று வளவுகள் என்று கிடைக்குமிடங்களில் விளையாடினோம். பெரிய மைதானங்கள் உள்ள பெரும் ஆதரவுப் பட்டாளங்களுடன் வந்த கழகங்களை, மூக்கில் விரல் வைக்க செய்தார்கள் எங்கள் வீரர்கள் என்பது மிகவும் பெருமை. நாம் விளையாடும் போது எங்களின் உடைமைகளை பாதுகாக்க இருவர் மூவரே வருவார்கள். அவர்களே உதவி வீரர்களும், எங்களுக்காக கைதட்டுபவர்க்களுமாக இருந்தார்கள்.
எங்களின் பீலே, மரடோனா, ரொனால்டோ வாக இருந்தவர் அண்ணன் மதியழகன். அவரையே பெரிதாக நம்பிச் சுழன்றது கழகம்.
பின்னணித் தடுப்பாட்டத்தில் அண்ணன் ஸ்கந்தராஜா சிறப்பாக விளையாடிவர். அவரைமீறிப் பந்தை நகர்த்துவது மிகவும் கடினமாக இருந்தது, எதிராக விளையாடிய கழகங்களுக்கு .
1980 இல் நடந்த வலிகாம் மேற்கு உதைபந்தாட்டப் போட்டிகளில் கலந்து, மோத வந்த அனைத்துக் கழகங்களுக்கும், தோல்வியை பரிசளித்து, நாமே வெற்றிவாகை (சம்பியன்) சூடினோம். பின்னர் மாவட்ட ரீதிக்கான போட்டிகளில் பங்குபற்றினோம். அதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றைத் தண்ட உதைகள் மூலம் வென்றோம் .
யாழ்/துரையப்பா விளையாட்டரங்கில் பாடும் மீனுடன் இறுதியாட்டத்தில் மோதினோம். பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க, நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்கள் சகிதம் மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்தோம். அடுத்து வந்த ஆட்டத்தில் 4க்கு 0 கணக்கில் தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம். எமது கழக வீரர்கள் மூவர் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது.
மேலே சொன்னவை யெல்லாம் 12,13,14,15,16,17,18 வயதுகளிலே நடந்த கூத்துகள் - நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள். படிக்கச் சுவைக்க காத்திருங்கள் .
நினைவு ஆக்கம்
ம . இரமேசு
6 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் , ’பாரதி விளயாட்டுக் கழகம் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை 1980 வலிகாமம் மேற்கு உதைபந்தாட்டச சற்றுப்போட்டிச் சம்பியன்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

வியாழன், 12 செப்டம்பர், 2019

சேரலி  மிகு சீர்கழனி வாழ்  
செவ்வுழவர்  உழத்தி 
ஆக்கம்  கண்ட  நற்பொலி
 நானிலம்  பயக்க  அமைந்ததாமே 

தேரவர்க்கும்  தேன் தமிழ் புரவலர்க்கும் 
ஏடுடை மதிமிகு   புலவர்க்கும் 
ஒன்றா உடலுநர்க்கும் 
 எழில் மிகு சீர்வதன நங்கையர்க்கும் 
ஏன்!    கார்வினைபுரி  களங்கர்க்கும்  
மற்றே  வாள்  மொழி  பேசு  வீரர்க்கும் 
வேளை  வருங்கால்  வெந்தவை 
வேண்டுமேயாம்  விழி ஒளிர  வேல் சிறக்க  

சனி, 3 செப்டம்பர், 2016

மானிட உயிரின் மாண்பினை  மதி  அன்றேல் அழிவே நமது கதி 

மனிதனே!!  உன்னைப்போல்  சகல  உணர்வுகளும்   கொண்டதே  இன்னொரு உயிரும்,  அதை  நீ   மதி . உனக்கு கிட்டவில்லை என்பதற்காக  அவ்வுயிரை  வெறுப்பில் கொலை  செய்யாதே. மற்றவர்கள்  விருப்பும் இவ்வுலகில்  நீண்டகாலம்  வாழ்ந்து  மகிழ்வதே.   எல்லோர்  விருப்பமும் மகிழ்வை  நோக்கியே   அதற்காகவே  வாழ்கிறோம் .  மற்றவரை  நீ  மதிக்காவிட்டால்  இன்னொருவர்  உயிரை  துச்சமாக  எண்ணினால்  உனது  உயிரும்  பிறரால்  அவ்வாறே  எண்ணப்படும்   நீயும்  கொலைபடுவாய் .  ஆதலால்  இன்னொருவரை  கொலை செய்ய  எண்ணாதே. 
திரைப்பட  காட்சிகள்   உண்மையான  வாழ்வு  ஆகாது .  அதை  நம்பாதே  . 

காதல்  உணர்வு  மாந்தர்க்கு  பொதுவானது   அதன்  வழியில்  துணை தேடுவது ஒவ்வொருவரின்  உரிமை .  அவ்வுரிமையை  ஒழுங்கான  முறையில்  பயன்படுத்துதல்  வேண்டும் .  ஒருவரை ஒருவருக்கு  பிடிக்க வேண்டும் என்று கட்டாயம்  இல்லை .  விருப்பை சொல்லு  பதில்  இல்லை என்றால்  பழிவாங்கத் துடிக்காதே  பாபம்  செய்யாதே .  காட்டுமிராண்டிபோல்   செயற்பட்டு   சிறையில்  அடிவாங்கி  நோகாதே . வாழ்வு  ஒரு  பெண்  சம்பந்தம் மட்டுமன்று . பெண்ணின்பம்  இல்லாமல்   பலர்  வாழ்கிறார்கள்  உலகிலே   அவர்கள் எல்லோரும்  பழிவாங்க எண்ணினால்  உலகில்  அழகிகள்  இரார் . ஒவ்வொருவருக்கும் அளந்ததே  கிட்டும்  என்று  எண்ணு  கிட்டாததற்குப்   போராடுதல்  அறிவாகாது . கிட்டாதாயின் வெட்டென  மற .  தனிப்பட்ட  உனது  அறிவு  விருத்திக்கு  போராடு  பயில்  முயற்சியை தொடர்  ஆனால்  இன்னொரு  உயிரை  உன்பால்  நகர்த்திட  உலகு  வெறுக்கும் செயல்கள்  செய்யாதே.  

இந்தியாவில் சட்டங்கள்  இளகி  இருக்கிறது. இதன் காரணமாகவே  கொடிய கோரமான   கொலைகள் துணிவுடன் நடத்தப்படுகிறது . தண்டனையில்  மனிதாபிமானம்  நுழைவது  அச்சமின்றி   குற்றம்  புரிய கொடூரர்களுக்கு   ஏதுவாக  இருக்கிறது . சட்டத்தின் தண்டிப்பால்  நிரபராதி  தவறுதலாக  கொலைப்படக்கூடாது  என்பதனாலேயே  தண்டனை மனிதநேய  அடிப்படையில்   சற்று  தளர்வாக  வைக்கப்பட்டுள்ளது.     சவூதி  அரேபியா போல் பொதுமக்கள்  காண கற்கால  வழக்கப்படி   தலையை   வெட்டி  கொல்லும்  நடைமுறை  இந்தியாவில்  இருந்தால்  எவர்  பிறரை  கொலை செய்ய  எண்ணுவார் ? 

கோடீஸ்வரர்கள்  சட்டத்தை, தீர்ப்பை, தண்டனையை   பணம் கொடுத்து  வாங்கிவிடும்   நிலை  இந்தியாவில்  இருக்கும்  அசுத்தம்.  இதன் காரணமாக  பணக்காரர்கள்  அச்சமின்றி  அசுத்த வேலைகள்  செய்கிறார்கள் . பணம்  பதவி  இருப்பதனால்  காவலர்களையே  கைநீட்டி அடிப்பதும்  திட்டுவதும்   நடந்தேறிவருகின்றது. நடிகர் ஒருவர்   மது  போதையில்  வண்டியோட்டி  காவல்  துறை  வண்டியுடன்  மோதினார்,  மேலிடத்து  செல்வாக்கால்  வெளியில் வந்து   மேடையில்  நின்று உற்சாகமாக  கதை பேசுகிறார் . இதுவே  சாதாரண  மனிதராக  இருந்திருந்தால்  காவல் அதிகாரிகள்  அடித்தே  கொலை செய்திருக்கக்கூடும் . விசாரணைக்கு  அழைத்து சென்று  அடித்து  சாக்காட்டப்பட்டவர்கள்  ஒன்றா  இரண்டா  இந்தியாவில் . நல்லதை  எண்ணி  நல்வழியில்  செல்வோம் . பிறரை  வருதத்தி  இன்பம்  காண தவறில் கூடாத  செய்கையில்  வெற்றித்  தோள்கொட்டிட  எண்ணோம் .  வலியார் முன் தன்னை  நினைக்க  தான்  தன்னின்  மெலியார்மேல் செல்லுமிடத்து.

ஆக்கம் 
ம.ரமேஸ் 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நினைவில் நிலைத்த நேரங்கள்
சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன்,  எத்தனை மழையைக் கண்டேன் , எத்தனை மரங்களின் நிழல்கள், எத்தனை அழகு, என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குடிக்க குளிர்ச்சியான நல்லதண்ணீர்க் கிணற்று நீர், வாயில் கொறிக்க விளாங்காய், கொய்யாக்காய், மாங்காய், நெல்லிக்காயென காய்களும் கனிகளுமாக பெடியர்கள் நாம் ஊர்ச்சுற்றி மகிழ்ந்த காலமது.

.அம்மன்கோயில் அமைதியும்,  வீசும் கடற்காற்றும், ஆலமர நிழலும் அழகிய பெடியர்களின் சிரிப்பும், சேட்டைகளும், கேலிகளும், கிண்டல்களும், கோபமும், அடிபாடும், பின் நேசமும் ஆகா என்னவொரு அருமையான காலம். இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை மிக்க காலமது .

அதோ ! பேரழகன் வாறான் சிறிது நேரத்தில் மதியழகன் வருகிறான் பிறகு சபாவும் பகீரதனும், மனோகரனும், நேசகாந்தனும், அருமுருகுவும், திருமுருகுவும். தேவராசாவும் வருகின்றார்கள். சந்தைக் கட்டில் கூடி,  பலதும் பற்றிக் கதைத்து, கேள்விகள் கேட்டு, நொடிகள் அவிழ்த்து,  எம்ஜிஆர் - சிவாஜி பற்றிக் கதைத்து  குதூகலிக்கையில்,  உறவினர்கள், பெரியவர்கள் வரவே, மௌனமாகி நடிக்க - படிப்புமில்லை, பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று பேச்சு வாங்கிக் கொண்டே ஓடி ஒளித்தகாலமது . செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் உயிர் நடுங்கவே, பயத்தில் ஓடி ஒளிந்தோம். கறுப்பாய் இருக்கும் கன்னங் காதை தனது கரத்தால் சிவப்பாக்கும் திறமை கொண்டவர் அவர் . எங்களுக்கு வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் யாவும் அவரே அன்று .


பெடியர்கள்நாம் ஈச்சங்காட்டுக்கு நடை யெடுக்க, அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப் போகினம், சனி ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே" என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட , நாம் சிரித்தபடி ஓட்டமெடுக்க, எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் சென்று நுழைவோம், அங்கே நமக்கு எந்த முக்கிய வேலையும் இல்லை, ஊரார் கண்களிலிருந்து தூர இருந்தோம் அச்சமின்றி ஆனந்தமாக கதைக்க முடிந்தது,, சத்தமாகப் பாடமுடிந்தது.

பசுமையான வயல்கள் , ஆங்காங்கே மேயும் பசுமாடுகள், புதர்களுக்குமேல் பறக்கும் குருவிகள், செண்பகங்கள், கிளிகள், காகங்கள், விட்டு விட்டு பறக்கும் மைனாக்கள், மரங்கொத்திகள், அண்டங்காகங்கள், உழைக்கும் தோட்டக்காரர்கள், கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் காய்ச்ச எரித்த தடயமாக இருக்கும் கல்லுகளும், சாம்பலும், பெயர் தெரியாத இனிக்கும் சிறிய பழங்கள், நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள், முரிந்து கிடக்கும் மரங்கள், நெஞ்சை நிமித்தி உயர்ந்து நிற்கும் பனைமரங்கள்  ஆகா  ஆகா  என்ன அழகிய காட்சிகள் . நாம் இயற்கையுடன் ஒன்றியிருந்த அந்த நாட்கள்   இன்பக்கணங்கள் என்று அன்று புரியவில்லை. புழுதிப் பூக்களுடன் உருண்டு பிரண்டு விளையாடினோம் வாழ்வின் பாரங்கள் அறியாத வயதது.

ஈச்சங்காட்டுக்கு வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம். அவன்மீது அச்சம் கொண்டிருந்த போதிலும் சற்று தைரியமும் இருந்தது. காரணம் அவன் எங்களைத் தொட்டால், அதை வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லவே அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால் சிறு தெம்பு நினைப்புக்குள் ஊர்ந்தது.

வெள்ளையன் ஒரு முரடனாம், மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து சாக்காட்டிப் போட்டவனாம் என்று காற்றுடன் பரவியிருந்தது கதை, அதுமட்டுமல்ல பெண்சாதியை கத்தியால் வெட்டி இரண்டு துண்டாக்கியவனாமெனவும் கதை கசிந்த காலமது. உண்மை தெரியாது உலாவிய கதைகளவை - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்துப் பகிர்ந்து உண்டோம் - உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது,  துணிவும், சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்த வயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் .

பிற்பகல் பாரதி பாடியபடி, பாரதி விளையாட்டுக்கழகம், ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு -  விளையாட்டுக் கழக நிதிக்காக, பாடசாலைக்கு கல்லறுத்தார்கள், வீடியோப் படக்காட்சி நடத்தினார்கள். அதன் விளைவாக, கழகத்துக்கு சீருடை (ஜேசி) வாங்கப்பட்டது. அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம். உறவினர் ஒருவரின் வளவில், பாயாசம் காய்ச்சி குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது.

பந்து பந்து ,  பூட்ஸ் பூட்ஸ்,  ஓட்டம் ஓட்டம்,  அடி அடி,  கோல் கோல் -  பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர். ஊக்குவிப்பார் இன்றி வளர்ந்த கழகம்.  சில காரணங்களால் பெயர் மாறியது றோயல் விளையாட் டுக்கழகமென.  அக்கழகம் பெரிதாக உருவான கதை தனிக்கதை.  

நாங்கள் விளையாடச் சென்ற ஊர்கள் எனது ஞாபகத்துக்கு எட்டியவரை,  சுழிபுரம், காங்கேசன்துறை, மாதகல், இளவாலை, காரைநகர், தோப்புக்காடு, ஊர்காவற்றுறை , ஆனைக்கோட்டை, , சுன்னாகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானம் , யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, வவுனியா மாநகர சபை விளையாட்டரங்கு , அராலி மாவத்தை மைதானம் (பல தடவைகள்), வட்டுக்கோட்டை மாதாங்கோயிலடி மைதானம் , வட்டு/ யாழ்ப்பாணக்கல்லூரி மைதானம் , நாவாந்துறை, அளவெட்டி, மானிப்பாய் - இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் கழகத்துக்கு விளையாட மைதானமில்லை, வயல்கள், சிறிய சந்தை வளவு, வெற்று வளவுகள் என்று கிடைக்குமிடங்களில் விளையாடினோம். பெரிய மைதானங்கள் உள்ள பெரும் ஆதரவுப் பட்டாளங்களுடன் வந்த கழகங்களை, மூக்கில் விரல் வைக்க செய்தார்கள் எங்கள் வீரர்கள் என்பது மிகவும் பெருமை.  நாம் விளையாடும் போது எங்களின் உடைமைகளை பாதுகாக்க இருவர் மூவரே வருவார்கள். அவர்களே உதவி வீரர்களும், எங்களுக்காக கைதட்டுபவர்க்களுமாக இருந்தார்கள்.

எங்களின் பீலே, மரடோனா, ரொனால்டோ வாக இருந்தவர் அண்ணன் மதியழகன். அவரையே பெரிதாக நம்பிச் சுழன்றது கழகம்.

பின்னணித் தடுப்பாட்டத்தில் அண்ணன் ஸ்கந்தராஜா சிறப்பாக விளையாடிவர். அவரைமீறி பந்தை நகர்த்துவது மிகவும் கடினமாக இருந்தது எதிராக விளையாடிய கழகங்களுக்கு .

1980 இல் நடந்த வலிகாம் மேற்கு உதைபந்தாட்டப் போட்டிகளில் கலந்து, மோத வந்த அனைத்துக் கழகங்களுக்கும், தோல்வியை பரிசளித்து, நாமே சம்பியன் ஆனோம்,  பின்னர் மாவட்ட ரீதிக்கான போட்டிகளில் பங்குபற்றினோம் அதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றை தண்ட உதைகள் மூலம் வென்றோம் .

யாழ்/துரையப்பா விளையாட்டரங்கில் பாடும் மீனுடன் இறுதியாட்டத்தில் மோதினோம் , பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்கள் சகிதம் மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்தோம் , அடுத்து வந்த ஆட்டத்தில் 4க்கு 0 கணக்கில் தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம். எமது கழக வீரர்கள் நால்வர் யாழ் மாவட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது. மேலே சொன்னவை யெல்லாம் 12,13,14,15,16,17,18 வயதுகளிலே நடந்த கூத்துகள் -  நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள், படிக்கச் சுவைக்க காத்திருங்கள் .
நினைவு ஆக்கம்
ம . இரமேசு

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்  
சிரிப்பு  சிரிப்பாக  வருகின்றது  
இதுதாண்டா  உலகம்   
எதையும் புரியாது  பாராட்டும் 
 என்ன என்று கேட்டால்  
கோபங்கொள்ளும்   
வேடிக்கை  மாந்தர் என்றான்
 எட்டைய புரத்தான்
 சரியாகத்தான்  இருக்கின்றது 
 என்று சொல்லிக்கொண்டே
 ரஞ்சித்  என் கண்பார்வையிலிருந்து
 மறைந்தான்,  மழை  மீண்டும் 
துமித்தது  தொடர்வதற்காக . 
அங்கே கிழக்காலே  வானம் 
இருட்டிக் கிடந்தது  
கடல்  அலைகள்  சிரித்து சிரித்து 
மேலெழும்பி  அடங்கின  
அங்கையர்க்கண்ணி  அனைத்தையும் 
 வேடிக்கை  பார்த்தாள்  அவளுக்கென்ன
அவன்  துணை  பக்கத்தில்  இருக்கையில் .

ம.ரமேஸ் 

சனி, 20 பிப்ரவரி, 2016

வட்டுக்கோட்டை - ஊர்ச்சிறப்பு 

ஈழத்தின் முக்கிய ஊர்களில் தனியிடம் வட்டுக்கோட்டைக்கு உண்டு .


வீரபத்திரர் சுவாமியை  இதயமாக வைத்து சுற்றி வாழும் வட்டூர்மக்கள் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று பார் புகழ் சிறப்புடன் வாழ்பவர்கள். 

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தொழிற்றுறைகளில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் ,  திகழ்பவர்கள் வட்டூரார்.

கல்வி கேள்வி ஞானம் பெற்ற முழு மதியினை ஒத்த மனிதர்கள் வாழ்ந்த, வாழும்  பூமி வட்டுக்கோட்டை, ஆதலால் அங்கு கல்வியும் கலைகளும் பால் நிலவாகப்  பொழிகின்றன . முன்னோரின்  எச்சங்கள் தந்தையர் வழியில் புகழ் பூத்த மலர்களாக இன்று உலகெங்கும் வாசம் பரப்புகிறார்கள்.

சிந்தனையும் செந்தமிழும் ஒன்றையொன்று பின்னியிருக்கும் வட்டூரிலிருந்து , எட்டூர்கள் கேட்க ஆலயமணியின் கொட்டாக அவர் தம் புகழொலி பரவியது ஈழமெங்கும். (ஈழம் = இலங்கை )


இலங்கையின் இராச மருத்துவ நிபுணராக  விளங்கியவர்  அமரரான  பரியாரியார்  குமாரசாமி  வட்டூருக்கு  புகழ் வேய்ந்த  பொன்மறவர் .

மா தமிழ் ஒள்ளியர்  நல்லதம்பி புலவர்  என்னும் தமிழ்வாரி  இலங்கையின் தேசிய கீதத்தை  தமிழாக்கம் செய்த மாபெரும்  தமிழ் பேராசான் ஆவார்  .
அவர்களது வழியில் நாற்கவிராசர்  தமிழ் விற்ப பொன்முடி  பேராசான்  அமரர் மயில்வாகனனார் - கற்பித்த  பாடசாலைகள்  எங்கும்  மாணவர்கள்  தமிழ்ப் பொறி  கக்க  பெருஞ் சேவையாற்றிய  பெருமான். நிறை  நூல்களை  வெண்பாக்களை  இறை  போற்றுதலை  தனது தமிழ் புலமை வழியாக  உலகுக்கு  அருளிய  தமிழ் அமுதக்கடல் அன்னார் அவர்கள்.  

 இன்று இலங்கையில்  புகழுடன் திகழும் சுவாச மருத்துவ நிபுணர்  திருமாறன் பாலகிருஷ்ணன் வட்டூர் வாசியே. தாய்லாந்து நாட்டின்   அரச  மரியாதை
பெற்ற  மா மருத்துவர் .


எதிர்காலத்தில்  சேவை ஆற்ற  இன்று  பல்வேறு நாடுகளிலும்  வட்டூர் பிள்ளைகள்  திறமையாக  கற்றுவருகிறார்கள் . அண்மையில்  திரவியராசா விசயலட்சுமி  தம்பதிகளின்  புதல்வி  மருத்துவராக தேறியுள்ளார்கள்  . 

மருத்துவம்,பொறியியல்,சட்டம்,கணக்கியல் போன்ற துறைகளில் நாடெங்கும் சிறந்துவிளங்கினார்கள் வட்டூரார்கள். அவை மட்டுமன்றி சிற்பக் கலை , கட்டிடக் கலை போன்றவற்றிலும் ஒப்பாரும் மிக்காருமிலாது நாடெங்கும் புகழ் கொண்டிருந்தார்கள். 


 சிற்பச் சிகாமணி  சிற்பச் சக்கரவர்த்தி என இலங்கை  அரசாலும் மக்களாலும் அழைக்கப்பட்ட  அமரர் செந்தூர்ராசா வட்டுமண்ணின் மைந்தனே. அவரை அறியாத ஈழத்து கோயில்களின்  அறங்காவலர்கள்  இல்லை எனலாம்.

"காபன்" கந்தையா என்ற மாபெரும் பேரறிஞர் வாழ்ந்ததும் வட்டூரிலேயே அவரே  இலங்கையின்  அதிசிறப்பு வாய்ந்த உயர்தகுதி  அதிபர்  என்ற தரத்தினை  முதல் முதலாகப் பெற்றவர் .


நாட்டுக்கூத்து என்னும் ஒப்பற்ற கிராமியக்கலையினை இன்றளவும் போற்றிக் காப்பற்றிவருபவர்கள் வட்டூர் கலைஞர்களே - வெளிநாட்டிலும் ஆடுகின்றார்கள்  குறிப்பாக  பிரான்ஸ் நாட்டில்   ஆடி அக்கலைதனை அழியாது  பாதுகாக்கிறார்கள்  மகிழ்விக்கிறார்கள் .

கலைகளின்பால்  பேரார்வம்  கொண்டதனால்  தங்கள் ஊரின்   ஒரு பகுதிக்கு கலை நகர்  என்று பெயர் சூடி  மகிழ்ந்துவரும் உன்னத  மக்கள் வட்டூர் மக்கள் .


இயல் இசை நாடகம் என முக்கலைகளிலும் முன்னேறி பளிச்சிட்டவர்கள் வட்டூர்  கலைஞர்கள், கலைகள் மட்டுமன்றி படகு கட்டுதல், பழுது பார்த்தல் என அடிப்படைத் தொழில்கள் அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள் வட்டூரார் என்றால் மிகையில்லை.

ஈழத்தின் பல பாகங்களிலும் கட்டிடங்கள் கட்டுவதில் பெயர்போன சிறந்த கட்டுவேலை செய்யும் கலைஞர்களை கொண்டது வட்டூர்.
அழகிய பெரிய வீடுகள் ஈழத்தில்  கண்ணில் தென்பட்டால் அதன் பின்னால் எப்படியும் வட்டூர்க்  கலைஞர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டுதல் , நெசவு நெய்தல் ,  விழாக்களுக்கு அலங்கரித்தல், மின்னிணைப்பு வழங்குதல் போன்ற தொழில்களும் குறைவின்றி கோலோச்சுவது வட்டூரில்.  

விளையாட்டில் - கைப்பந்து, காற்பந்து, துடுப்பாட்டம், கிளித்தட்டு என பல்வேறு விளையாட்டுக்களும் இனிதே வலம் வருவது   வட்டூரில் .

வட்டு சிவன் கொடி ஏறினால் ஊரே பக்திப்பரவசத்தால் திளைக்கும். இலங்கையின்  பல பாகங்களிலும் தொழில் புரியும்  வட்டூர் வாசிகள்  ஊருக்குள் வந்து நிறைவார்கள், இரவுத் திருவிழாக்கள் கலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு போட்டி போடும், மின்விளக்கால் ஊரே பல வர்ணத்தில் ஜொலிக்கும்.

வட்டூர் வராத ஈழத்தின் கலைஞர்கள் யாரென்று விரல் விட்டு எண்ணிவிடலாம்,  ஈழத்தின் புகழ்பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்கள் தொடங்கி நாட்டிய மயில்கள், இசைக்குழுவினர்கள்  , வயலின் மேதைகள், நாடக நடிகர்கள், வில்லுப்பாட்டு குழுக்கள் என்று ஊரே கலைஞர்களால் கலைப்பொங்கல் காணும்.

வீட்டுக்கு வீடு பரியாரியார்கள் , அண்ணாவியார்கள்,  வாத்தியார்கள் என்று நிறைந்து விளங்கும் ஊர், அன்று நாட்டுக் கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள்  இன்றும் பெருமையாக அழைக்கப்படுகின்றார்கள் அவர்கள் ஏற்ற பாத்திரங்கள் மூலம், தருமன், வீமன் அருச்சுனன், இயமன், குதிரை, இராமர்,அனுமன், வேடன் என்று -   விதுரராக  நடித்த  பாலசுப்பிரமணியம்  ஐயா  அவர்களின் கலைத்தொண்டைப் பாராட்டி  இலங்கை அரசு  
அண்மையில்   மதிப்பளித்து சிறப்புச் செய்தது.

அமரர் முருகவேள் ஆசிரியர் பிரபல நாட்டுக்கூத்து ஆசிரியருமாவார் அவர்கள்  கலைக்கு  ஆற்றிய தொண்டு அளப்பரியது.  மற்றையவூர்   கலைஞர்களும் மதித்துப்  போற்றிய கலைஞராகத் திகழ்ந்தவர்.  இறுதிக்காலம் வரை நாட்டுக் கூத்தை பழக வந்த அனைவருக்கும் பேதம் பாராது கற்பித்தார்.

அமரர் காசிப்பிள்ளை பரியாரியாரின் பெயரைக் கேட்டால் அவரின் புகழை அறிந்தோர் ஒருகணம் எழுந்து நிற்பார்கள், பின்னர்  கொழும்பில் புகழுடன் விளங்கியா   வைத்தியர் அமரர்  சு . கனகரத்தினம் , கனடாவில் வாழும் மருத்துவர் க . ராதாகிருஷ்ணன் ,  மருத்துவர் கைலாயநாதன் போன்று இன்னும் பலர் புகழ்பூத்த விற்பன்னர்களாக வட்டூருக்கு பெருமை சேர்க்கின்றார்கள்.

சிங்கப்பூரில்  சுரங்க வழி  தொடருந்துப் பாதையை அமைத்து  வருகின்றார்  நம் வட்டூரின் பொறியாளர்  ச . பிரோசானந்த்.
இன்று நவீன  மருத்துவ விற்பன்னராக  கொழும்பில்  க. கிருஷ்ணபிரசாத் பீடு நடை போடுகின்றார்  .
ஆண்களுக்கு இணையாக  இன்று  பெண்களும்  கல்வி கேள்விகளில்  சிறந்து விளங்குகின்றார்கள்  .

  பல்கலைக் கழகங்களில்   விரிவுரையாளர்களாக ,  பாடசாலைகளில்   ஆசிரியர்களாக  நம்  வட்டூர் ஒள்ளிழைகள்   வெற்றிக்கொடி  கட்டி  பவனி வருகின்றார்கள்.  மாபெரும்  கல்விச்சமூகம்  வீறுநடை பயில்கின்றது  நம்  ஊரில் .

யாழ்/ இந்துக்கலூரியின்  கணிதபீட  ஆசிரியராகத்   திகழும் நவராஜா  பிரசாந்த்  நம்  வட்டு மண்ணின்  செல்வனே.



பலாலி  ஆசிரியர்  பயிற்சித் திணைக்களத்தில் நீண்டகாலங்கள்  கடமை செய்து  நாட்டுக்கு  சிறந்த ஆசிரியர்களை  உருவாக்கிக் கொடுத்தவர் ஆசிரியர்  பெருந்தகை  அமரர்  அரியரட்ணம்  அவர்களும்  வட்டூரவரே.

  இப்படியாக  நிறையப்பேர்கள்  பல வழிகளில்  ஊரின்  பெருமைக்கு   காரணிகளாக இருந்தார்கள்,  இருக்கிறார்கள். 

 கள்வர்கள்  குடிகேடர்கள்  இல்லாத  உத்தம இரத்தினங்களை கொண்டது  வட்டூர்.

  நல்லதை நினைத்து  நலத்தையே செய்யும்  இரத்தவழி 
வந்தவர்கள்  ஆதலினால்  அல்லவை  செய்ய  எண்ணுவதில்லை  வட்டூர் 
மக்கள் .

ஆசியாவின் அழகு மணித்தீவின் அற்புதமாம் ஈழவர் நாட்டின் வட்டூர் என்னும் தொன்மை மிகு  செவ்வூரில் நற்றமிழ் குடித்து
நலமே நம் வட்டூர்  மாமணிகள் வாழ்க வாழ்க வாழியவே .

( அடியேன் அறிந்த வரையில் போற்றுதலுக்குரியோர்களை  எழுதியுள்ளேன்   அறியாமல் விடுபட்டவர்களையிட்டு குறை கொள்ளாது  நினைவூட்டினால்  அவர்களது பெயர்களையும்  சேர்ப்பேன் )
தொலைபேசி / வாட்சாப்   - 0045/ 52699910

ஆக்கம்
அன்புடன்
ம . இரமேசு  

வாழும் நாடு 
டென்மார்க்