புதன், 24 நவம்பர், 2021

 ஒரு காலத்தின் வாழ்வியல் இலக்கியமாகிறது. இலக்கு என்ற பனையோலையில் எழுதியதாலேயே, அதை இலக்கியம் என்றார்கள் நமது முன்னோர்கள் . உண்மையான வாழ்வியலை எழுதுகையில் நம்முடன் சேர்ந்த தோழர்களின் பெயர்களைக் குறித்தே ஆகவேண்டிய நிலை உண்டாகுகிறது. அதனால் எனது பெயரை ஏன் எழுதினாய் என்று கோபம் கொள்ள வேண்டாம் அன்பர்களே, நண்பர்களே. கற்பனையான கதையாகில் வேறு பெயர்களைக் குறிப்பிடலாம்.

நினைவில் நிலைத்த நேரங்கள்
############################################
சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன், எத்தனை மழையைக் கண்டேன் , எத்தனை மரங்களின் நிழல்கள், எத்தனை அழகுகள், என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குடிக்க குளிர்ச்சியான நல்லதண்ணீர்க் கிணற்று நீர், வாயில் கொறிக்க விளாங்காய், கொய்யாக்காய், மாங்காய், நெல்லிக்காயென காய்களும் கனிகளுமாக, பெடியர்கள் நாம் ஊர்ச்சுற்றி மகிழ்ந்த காலமது.
.அம்மன்கோயில் அமைதியும், வீசும் கடற்காற்றும், ஆலமர நிழலும் அழகிய பெடியர்களின் சிரிப்பும், சேட்டைகளும், கேலிகளும், கிண்டல்களும், கோபமும், அடிபாடும், பின் நேசமுமாக என்னவொரு அருமையான காலம். இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை மிக்க காலமது.
அதோ ! பேரழகன் சிறிது நேரத்தில் மதியழகன் பிறகு சபாவும், பகீரதனும், மனோகரனும், நேசகாந்தனும், அருமுருகுவும், திருமுருகுவும். தேவராசாவும் வருகின்றார்கள். சந்தைக் கட்டில் கூடி, பலதும் பற்றிக் கதைத்து, கேள்விகள் கேட்டு, நொடிகள் அவிழ்த்து, எம்ஜிஆர் - சிவாஜி பற்றிக் கதைத்து குதூகலிக்கையில், உறவினர்கள், பெரியவர்கள் வரவே, மௌனமாகி நடிக்க - படிப்புமில்லை, பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று பேச்சு வாங்கிக் கொண்டே ஓடி ஒளித்தகாலமது . செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் உயிர் நடுங்கவே, பயத்தில் ஓடி ஒளிந்தோம். கறுப்பாய் இருக்கும் கன்னங் காதை தனது கரத்தால் சிவப்பாக்கும் திறமை கொண்டவர் அவர். எங்களுக்கு வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் யாவும் அவரே அன்று.
பெடியர்கள்நாம் ஈச்சங்காட்டுக்கு நடை யெடுக்க, அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப் போகினம்" சனி, ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே >> என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட , நாம் சிரித்தபடி ஓட்டமெடுக்க, எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் சென்று நுழைவோம். அங்கே நமக்கு எந்த முக்கிய வேலையும் இல்லை. ஊரார் கண்களிலிருந்து தூர இருந்தோம். அச்சமின்றி ஆனந்தமாகக் கதைக்க முடிந்தது, சத்தமாகப் பாடமுடிந்தது.
பசுமையான வயல்கள் , ஆங்காங்கே மேயும் பசுமாடுகள், புதர்களுக்குமேல் பறக்கும் குருவிகள், செண்பகங்கள், கிளிகள், காகங்கள், விட்டு விட்டு பறக்கும் மைனாக்கள், மரங்கொத்திகள், அண்டங்காகங்கள், உழைக்கும் தோட்டக்காரர்கள், கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் காய்ச்ச எரித்த தடயமாக இருக்கும் சாம்பலும், பெயர் தெரியாத இனிக்கும் சிறிய பழங்கள், நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள், முரிந்து கிடக்கும் மரங்கள், நெஞ்சை நிமிர்த்தி உயர்ந்து நிற்கும் பனைமரங்கள் ஆகா ஆகா என்ன அழகிய காட்சிகள். நாம் இயற்கையுடன் ஒன்றியிருந்த அந்த நாட்கள் இன்பக்கணங்கள் என்று அன்று புரியவில்லை. புழுதிப் பூக்களுடன் உருண்டு புரண்டு விளையாடினோம் வாழ்வின் பாரங்கள் அறியாத வயதது.
ஈச்சங்காட்டுக்கு வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம். அவன்மீது அச்சம் கொண்டிருந்த போதிலும் சற்று தைரியமும் இருந்தது. காரணம் அவன் எங்களைத் தொட்டால், அதை வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லவே அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால் சிறு தெம்பு நினைப்புக்குள் ஊர்ந்தது.
வெள்ளையன் ஒரு முரடனாம், மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து சாக்காட்டிப் போட்டவனாம் என்று காற்றுடன் பரவியிருந்தது கதை. அதுமட்டுமல்ல பெண்சாதியை கத்தியால் வெட்டி இரண்டு துண்டாக்கியவனாமெனவும் கதை கசிந்த காலமது. உண்மை தெரியாது உலாவிய கதைகளவை - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்துப் பகிர்ந்து உண்டோம் - உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது, துணிவும், சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்த வயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் .
பிற்பகல் பாரதி பாடியபடி, பாரதி விளையாட்டுக்கழகம், ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு - விளையாட்டுக் கழக நிதிக்காக, பாடசாலைக்கு கல்லறுத்தார்கள், வீடியோப் படக்காட்சி நடத்தினார்கள். அதன் விளைவாக, கழகத்துக்கு சீருடை (ஜேசி) வாங்கப்பட்டது. அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம். உறவினர் ஒருவரின் வளவில், பாயாசம் காய்ச்சி குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது.
பந்து பந்து , பூட்ஸ் பூட்ஸ், ஓட்டம் ஓட்டம், அடி அடி, கோல் கோல் - பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர். ஊக்குவிப்பார் இன்றி வளர்ந்த கழகம். சில காரணங்களால் பெயர் மாறியது றோயல் விளையாட்டுக் கழகமென. அக்கழகம் பெரிதாக உருவான கதை தனிக்கதை.
நாங்கள் விளையாடச் சென்ற ஊர்கள் எனது ஞாபகத்துக்கு எட்டியவரை, சுழிபுரம், காங்கேசன்துறை, மாதகல், இளவாலை, காரைநகர், தோப்புக்காடு, ஊர்காவற்றுறை , ஆனைக்கோட்டை, , சுன்னாகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானம் , யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, வவுனியா மாநகர சபை விளையாட்டரங்கு , அராலி மாவத்தை மைதானம் (பல தடவைகள்), வட்டுக்கோட்டை மாதாங்கோயிலடி மைதானம் , வட்டு/ யாழ்ப்பாணக்கல்லூரி மைதானம் , நாவாந்துறை, அளவெட்டி, மானிப்பாய் - இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் கழகத்துக்கு விளையாட மைதானமில்லை, வயல்கள், சிறிய சந்தை வளவு, வெற்று வளவுகள் என்று கிடைக்குமிடங்களில் விளையாடினோம். பெரிய மைதானங்கள் உள்ள பெரும் ஆதரவுப் பட்டாளங்களுடன் வந்த கழகங்களை, மூக்கில் விரல் வைக்க செய்தார்கள் எங்கள் வீரர்கள் என்பது மிகவும் பெருமை. நாம் விளையாடும் போது எங்களின் உடைமைகளை பாதுகாக்க இருவர் மூவரே வருவார்கள். அவர்களே உதவி வீரர்களும், எங்களுக்காக கைதட்டுபவர்க்களுமாக இருந்தார்கள்.
எங்களின் பீலே, மரடோனா, ரொனால்டோ வாக இருந்தவர் அண்ணன் மதியழகன். அவரையே பெரிதாக நம்பிச் சுழன்றது கழகம்.
பின்னணித் தடுப்பாட்டத்தில் அண்ணன் ஸ்கந்தராஜா சிறப்பாக விளையாடிவர். அவரைமீறிப் பந்தை நகர்த்துவது மிகவும் கடினமாக இருந்தது, எதிராக விளையாடிய கழகங்களுக்கு .
1980 இல் நடந்த வலிகாம் மேற்கு உதைபந்தாட்டப் போட்டிகளில் கலந்து, மோத வந்த அனைத்துக் கழகங்களுக்கும், தோல்வியை பரிசளித்து, நாமே வெற்றிவாகை (சம்பியன்) சூடினோம். பின்னர் மாவட்ட ரீதிக்கான போட்டிகளில் பங்குபற்றினோம். அதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றைத் தண்ட உதைகள் மூலம் வென்றோம் .
யாழ்/துரையப்பா விளையாட்டரங்கில் பாடும் மீனுடன் இறுதியாட்டத்தில் மோதினோம். பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க, நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்கள் சகிதம் மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்தோம். அடுத்து வந்த ஆட்டத்தில் 4க்கு 0 கணக்கில் தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம். எமது கழக வீரர்கள் மூவர் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது.
மேலே சொன்னவை யெல்லாம் 12,13,14,15,16,17,18 வயதுகளிலே நடந்த கூத்துகள் - நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள். படிக்கச் சுவைக்க காத்திருங்கள் .
நினைவு ஆக்கம்
ம . இரமேசு
6 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் , ’பாரதி விளயாட்டுக் கழகம் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை 1980 வலிகாமம் மேற்கு உதைபந்தாட்டச சற்றுப்போட்டிச் சம்பியன்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்