சனி, 10 மே, 2014

காய்ந்த பூக்கள் (2)
எடி பிள்ளை தில்லை----- என்று கிணத்தடியில நிண்டுகொண்டு ஓங்கிக் கத்தினா சாந்தம்மா, என்ன-- என்றபடி தில்லை வந்தாள் கொப்பருக்கு
காரமா ஏதாவது செய்து போடவேணும் மனுஷன் ரெண்டுநாளா சாப்பாடு சரியில்லை காரமுமில்லை எண்டு புறு புறுத்தது அட்டாளையில கிடக்கிற குண்டானை எடுத்து வடிவா கழுவு மனுஷனுக்கு கூழ் வைக்க வேணும் மனுஷன் கூழெண்டா விரும்பி குடிக்கும் என்றா சாந்தம்மா - எடியே ! இஞ்ச கிட்டவா நானும் ரெண்டு நாளா யோசிக்கிறன் ஒண்டும் தட்டுபடேல்லை கமலக்  குஞ்சி வீட்டை என்னவன் விசேசம் நடக்குமெண்டோ !!!   அங்கை இனி சாந்தனுக்கு கலியாணம் தான் நடக்குமென்றாள் தில்லை, எட ...ஓமடி எப்படியடி உடன சொல்றாய் என்று வியந்து நிண்டா சாந்தம்மா நான் மூத்தவளின்ர பிள்ளையளை பற்றி யோசிச்சுக்கொண்டு சாந்தனை மறந்துவிட்டன் .

 நானும் சிமித்தியக்காவும் பின்னேரம் யாழ்ப்பாணம் போகப்போறம் இதுக்கு மேல என்னால இண்டைக்கு வேற வேலை செய்ய முடியாது என்றுவிட்டு நகர்ந்தாள் தில்லை, போறது சரி படங்கிடம் பார்கிறதில்லை போனதும் வந்ததுமா இருக்கவேணும் பிறகு மனுஷன் கேள்விபட்டா என்ன நடக்குமெண்டு தெரியுந்தானே என்று மகளை கண்டித்தா சாந்தம்மா .
 
ஊரிலிருந்து வந்த கடிதத்தை படித்துவிட்டு யோசனையுடன் தேத்தண்ணி போட்டுக்கொண்டிருந்தான்எக்கவுண்டன் சாந்தன் ஏற்கனவே கொழும்பில் டீச்சராயிருக்கும் பவானி என்ற பெண்ணை காதலித்துவிட்டான் அவளும் யாழ்ப்பாணத்துக்காரிதான் பவானியின் நிபந்தனைகலியாணத்துக்கு பிறகு தங்கள் ஊரிலே இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன் என்பதே, கேட்டு வந்திருக்கும் ஒட்டற்ற பேத்தி மலரும் நல்ல அழகிதான் சங்கீத ஆசிரியை வேறு ஆனாலும் காதலித்தவளை ஏமாற்றக்கூடாது என்ற நினைப்பில் சாந்தன் இருந்தான்.
 
சாந்தனின் அழகிலும் பண்பிலும் மயங்கியவள் சாதியைபற்றி அறியாமலே காதலித்துவிட்டாள் பின்பு அறிந்ததும் பழையவர்கள் ஏற்றி வைத்த சாதித்தீ அவளுள்ளும் புகைந்தது யாழில் பிறந்தவர்களுக்கு காதல் கலியாணம் என்றால் முதலில் எழும் கேள்வியே என்ன சாதி என்ற மடத்தனமான கேள்வியே அதுக்கு அவளும் விதிவிலக்கல்ல

எல்லோரும் மனிதர்களே என்று எண்ணி வாழும் சமத்துவ மனம் யாழ் மக்களுக்கு இலகுவில் வராதவொன்று ஆபிரிக்காவோ ஐரோப்பாவோ யாரைவேணுமோ கலியாணங்கட்டு, ஆனா இஞ்சை கலியாணங் கட்டுறதெண்டா எங்கட சாதியுக்குள்ளதான் கட்டவேணும் என்ற எழுதாத  சட்டம் அமுலில் இருக்கும் யாழ்ப்பாணம் இலகுவில் மாறமாட்டாது.
 
தன்னை கஸ்டப்பட்டு ஆளாக்கிய தாய்  தந்தை மனதை நோகடிக்காமல் இருக்கவேண்டும் அவர்கள் பார்க்கும் இடத்தில்
திருமணம் செய்ய வேண்டும் என்றால் பவானியை களைய  வேண்டும் இல்லை பவானியை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் பெற்றோருக்கு காட்டி
ஊரிலே திருமணத்தை நடத்தவேணும் அதற்கு பவானி ஒப்புக்கொள்ளவேண்டும் இல்லை அவளின் சாதியுக்குள்ள அவள் கிடந்து மசியட்டும்
என்ற முடிவை சாந்தன் சிந்தித்து எடுத்தான்,

 பேசி வைத்தபடி இருவரும் பழைய படம் ஒன்று ஓடும் பிளாசா திரையரங்கில் சந்தித்துக்கொண்டனர் படம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது சாந்தன் முழுவிபரத்தையும் சொல்லி முடிக்கவும் இடைவேளை விழவும் சரியாக இருந்தது கைக்குட்டையால் முகத்தை அரைவாசி மறைத்தபடி பவானி எழுந்து வெளியில் செல்ல சாந்தனும் தொடர்ந்தான்  இஞ்சை  பாரும்  என்றவனை முறைத்து பார்த்துவிட்டு போனவள் போனவளே, இந்தப் பொம்பிளையளுக்கு என்ன சொன்னாலும் எப்பிடி சொன்னாலும் ஏறாது என்று அலுத்தபடி வீட்டுக்கு போக பஸ்பிடிக்க நடந்தான் சாந்தன் .
வடிப்பு
ம.இரமேசு

சனி, 3 மே, 2014

ஐஸ்வர்யாராயும் அறிவை சிலமணிநேரங்கள் பெட்டியுக்குள் பூட்டிவைத்தார்.
February 21, 2012
இறைவனை மட்டும் நம்புங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சடங்குகளை அறிவுக்கு ஒத்துவராதவற்றை நம்பாதீர்கள்.  கண்மூடித்தனமாக மதத்தை நம்பும் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலேயே  வறுமையும் சண்டைகளும் அதிகமாக இருக்கின்றது.  அறிவியலின் பால் ஒழுகும் ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் தங்களுக்குள் இப்படி தேவையற்ற விடயங்களுக்கு சண்டை பிடிப்பதில்லை, தர்க்கம் புரிந்து மன நோவை வைத்து உறங்க செல்வதில்லை, முடிந்த மட்டில் இன்பமாக வாழுகின்றார்கள் அன்றாட கடமைகளை சரியாகச்  செய்து .

நாங்கள் இறைவனிடம் அதிகம் எதிர்பார்க்கின்றோம், ஆக்கத்தில் அக்கறையை குறைத்து. சோம்பேறிகளாக, மதக்கூட்டங்கள் தர்க்கங்களால் வீணான சண்டைகளும் மன வடுக்களுமே மிகுதியாகின்றது. அது வருங்கால சமுதாயத்துக்கு அமைதிவாழ்வுக்கு நன்றல்ல,  இறைவனும் சண்டை பிடிப்பவர்களை பிரியமாகப்  பார்க்கமாட்டான். ஆதலினால் சகோதர சகோதரிகளே உண்மையான இறைவனை மட்டும் வணங்கி,  நிம்மதியாக வாழ்வோம்.  அதிகம் வாயாடுதல் இறைநம்பிக்கைக்கு குந்தகம் உண்டாக்கும், எண்ணிப்பாருங்கள், அமைதி பேணுங்கள் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் நானே பெரியவன் என்று தலைக்கனத்தால் மற்றவர்களிடமிருந்து வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்போம்.
"முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

 இன் சொலினதே அறம்"
(குறள் 93 ).
.
உலகம் அமைதியாக இருந்தால் உயிர்கள் நீண்டு வாழும் சகோதரத்துவம் பின்னிப்பிணைந்திருக்கும் இன்பம் நிறையும் ஏற்றங்கள் பெருகும் ஆதலினால் மற்றவர்களுடன் இனிய வார்த்தைகளால் பேசி அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்வோம்.  உலகமக்கள் அனைவரும் ஓரினமே, ஆதலால் யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் உலக சகோதரத்தை வலியுறத்தி கணியன் பூங்குன்றனார் 2000 வருடங்களுக்கு முன்னரே,  அவர் சொன்னதை மறந்தோம் நேற்று கென்னடி சொன்னார் என்றோம் இன்று ஒபாமா என்று சொல்லுகின்றோம் உலக மயமாக்குதல் வியாபாரத்தை பெருக்கும் நோக்கிலே சொல்லப்படுகின்றது இன்று என்றால் மிகையில்லை.சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல், தமிழர் வாழ்வும் வளமும் தமிழருக்குள் ஊடுருவி பிழைக்க வந்த மதவாதிகளினால் சிதைந்தது. தேவையற்ற பித்தலாட்ட சடங்குகளாலும்  இடையில் முளைத்த சம்பிரதாயங்களாலும் மதவாதிகள் பிழைத்துகொண்டனர் சாமி பெயரை சொல்லி.  அறிவு மழுங்கடிக்கப்பட்டது.


இந்துப்பெண்கள் கணவன் உயிர்துறந்தால் உடன்கட்டை ஏறுதல் என்றொரு கொடுமையான வழக்கத்தையும் மதவாதிகள் கொண்டிருந்தார்கள். அந்தக் கண்மூடித்தனமான வழக்கத்தை உடைத்தெறிந்து பெண்களை காத்த பெருமை ” ராஜா ராம் மோகன் ராயையே” சேரும் அவரை ஒவ்வொரு பெண்ணும் கையெடுத்து வணங்கவேண்டும். பெண்களென்ன மனித நேயம் மிக்க அனைவரும் வணங்கலாம் போற்றலாம் அந்த உத்தமரை. மதத்தின் பெயரால் உறுப்புகளை அறுத்தலும், எரிந்த உடலிலிருந்து எலும்பை எடுத்து அதனை வைத்து சடங்கு செய்வதும்; என்றெல்லாம் பிழைப்புவேண்டி அறிவுக்கு பொருந்தாத விடயங்கள் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  வாழைமரத்துக்கு மாலைபோட்டு அல்லது தாலி கட்டி தோஷம் நீக்கும் சடங்கு என்றொரு சடங்கு,  இதில் வேடிக்கை என்ன வென்றால் உலகப்பிரசித்திபெற்ற அழகி ஐஸ்வர்யா ராயே இப்படியான ஒரு சடுங்குக்குள் திணிக்கப்பட்டது. உலகப்போட்டியில் அறிவுபூர்வமாக பதிலிறுத்த பெண் கடைசியில் மதவாதிகளின் மக்கு வேலைக்கு மசிந்தாரே; மரியாதையின் காரணமாக இப்படி பிற்போக்குத்தனங்களை மதிப்போரால், அவர்கள் மீது பற்றுக்கொண்டவர்களும் அவர்களுக்காக அறிவுகெட்ட சடங்குகளில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி முழிக்க வேண்டியுள்ளதை நினைக்கையில் வேதனையுண்டாகின்றது.


கோயிலுக்குள் சென்று ஒருசில நிமிடங்கள் இறைவனை தரிசிக்கவே காசுகேட்கும் மடைத்தனத்தை , தமிழ்நாட்டின்  பெரும்பாலான பிரசித்திபெற்ற கோயில்களில் காணலாம். இதை தவறு தப்பு என்று சொல்ல எந்தப் படித்தவர்களும் பண்பாளர்களும் உயரிய நோக்கங்கள் கொண்ட மனிதநேயர்களும் எழாதது குரல் கொடுக்காதது ஏனோ தெரியவில்லை. இறைவனுக்கு பயப்படும் ஒருவன் இறைவனை காட்டுகிறேன் காசுகட்டு பற்றுசீட்டு வாங்கு என்று சொல்வானா மக்களே ?


நீங்கள் இந்தியா செல்லும் பட்சத்தில் கோயில்களுக்கு சென்றால் தயவு செய்து கட்டணத்தைச்  செலுத்தி உள்ளே சென்று சாமி கும்பிடாதீர்கள், அப்படி செய்வீர்களாயின் அது இறைவனுக்கு செய்த மிகப்பெரிய பாவமாகவே இருக்கும், என்பதனை மனதிற்கொள்வீர்களாக.  அப்படியே சென்றால் காசுகட்டாது வெளியில் நின்று கண்களை மூடி உங்கள் தியானத்தை செய்துவிட்டு வாருங்கள். இப்படி அனைவரும் செய்யும் பட்சத்தில் காசுகறக்கும் ஏமாற்றுக்காரர்கள் கண் திறக்க வாய்ப்புண்டாகும், ஆக நாம் அனைவரும் அறிவின் கண்களைத் திறந்தால் அனைவருக்கும் ஆண்டவன்  அன்பின் அருளின் கண்களைத்  திறப்பார்.


எழுத்தாக்கம்
ம.இரமே
கூவாத குயில்கள் 

ஈழமண்ணில் வாழும் தமிழர்களை கூவாத குயில்களாக கூட்டுக்குள் அடைத்து வைத்து வேண்டிய பொழுதுகளில் அவர்கள் குரல்வளையை அறுத்தும் 
தங்கள் பசிக்கு இரையாக்கியும் சின்னாபின்னமாக்கியே சிங்கள மக்களரசு முனைப்புடன் பல்லாண்டு செயல்ப்பட்டது இன்றும் அவ்வண்ணமே
நடந்து கொள்கின்றது என்பதற்கு அண்மையில் நெடுந்தீவு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையினை வைத்து அறிந்து கொள்ளலாம், நாட்டுக்குள் இருங்கள்
நமக்கு அடிமையாய் செயல்ப்படுங்கள் இதுவே நமது நீதி என்று புத்தரின் பாதை செல்வதாக கூறுவோர் கூறும் சனநாயக தர்மம் சிங்களத்து மேலிடங்கள் சொல்லும் புதிய வேதம் மண்டியிட்டு மங்களம் பாடுவோருக்கு ஏற்புடைத்தாயினும் தன்மானம் சூடு சுரணை உள்ளவர்களுக்கு அடிபணிந்து வாழ விரும்பாதோருக்கு பாகற்காய் போன்றதே,மானம் ரோசம் என்று பேசினால் மரணமே பரிசாக வரும் அதிகார மேலிடத்தால்,செய்வதறியாது செயலிழந்து
அதிகார மேலிடத்தின் விருப்புக்கு பலியாகி வாழுங்கள் ஒரே கூட்டுக்குள் என்று ஈழத்தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அமிழ்த்தினால் அவர்களால் எப்படி கூவ முடியும் நீலம் கொண்ட நாகம்பக்கத்தில் நின்றுகொண்டு என்பதனை உலக வழிநடத்துனர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆங்காங்கே
வாழும் மற்றைய தேசத்தினர்கள் தங்கள் உரிமைகளை முழுவதும் பெற்று அச்சமின்றி தமது பிறந்த முற்றங்களில் வாழும்பொழுது ஈழத்து முற்றத்தில் பிறந்தவர்கள் எந்நேரம் சிங்களவர்கள் படைகள் வருமோ நம் செல்வங்களை கவர்ந்து செல்லுமோ என்று அஞ்சி அஞ்சி வாழவேண்டுமா ? கடைக்கு போனவன்,
உடைதைக்க சென்றவர், தண்ணியள்ள சென்றவள், சுள்ளி பொறுக்க போனவள்,பாடசாலைக்கு சென்றவள் - சென்றவன்,வேலைக்குபோனவர்,மாயம், மரணம்,
கடத்தல்,பலாத்தகாரம், என்ற செய்திகள் வருங்காலத்திலும் தமிழர்கள் காதுகளுக்குள் கலக்கவேண்டுமா இதுவரை கலந்தது போதாதா? படித்தோரே,பண்பாளர்களே,அறிவியல்பெருமக்களே,யாராவது எமக்கு உலகநீதி பாதுகாப்பு அச்சமில்லா வாழ்வு பெற்றுத்தர முன்வருவீர்களா நமது உரிமைகள் நம்மால் கேட்கப்பட்டதை தப்பு சொன்னவர்கள் அவர்கள் பாதையில் நமக்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் ,ஆனையின் தோல் கறுப்பு
என்றோம் இல்லை சிவப்பு என்றவர்களே நஞ்சின் நிறமான நீலம் போற்றுவோரிடம் நெஞ்சம் இருக்கின்றது என்று இன்னும் நீங்கள் நம்பலாமா?
அல்லது எல்லோரும் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களுக்கு நாடகம் நடித்து காட்டுகின்றீர்களா என்று கேட்க வேண்டியுள்ளது சில நடவடிக்கைகள் கண்டு
தனியொரு மாது தயக்கமின்றி சபையேறி நீதி கேட்க்க வழிசமைத்த ஆட்சிச் சிறப்பும் நீதியும் கொண்ட பாரம் பரியம் மிக்கவர்களுக்கு அரசியல் புகட்ட
முனைவது நம் வரலாறு அறியா அறியாமை என்பதனை நினைவூட்ட விரும்புகின்றேன். காலத்தால் தமிழினம் நலிந்திருந்தாலும் நமது கீர்த்தி பெரியது எந்நாளும் நலிவடையாது என்பதனை அனைவரும் மனதில் கொள்ளுதல் வேண்டும்.நமது குலத்தில் தோன்றிய உளுத்தர்களினால் ஓரம் கட்டப்பட்டோமே தவிர ஓரத்தில் நிற்பதனை ஒருபொழுதும் வரவேற்பதில்லை நம்மினம்.

தாகம் எடுத்தவன் தண்ணீர் குடித்தல் தப்பா ? அது தமிழன் என்றால் தப்பு என்கிறது
செங்காவித் துற(பா )விகள் ,நல்லொழுக்க வழிவந்த துறவி நாசம் செய்கின்றான் பெண்ணை ,தமிழர்களை கொலைசெய்தல் பாபம் அல்ல என்று புத்தனின் கருணை வழி செல்வதாக கூறும் சிங்களத்து செங்காவி கூறியிருந்தானே தமிழனொருவன் படகை ஓட்டிசெல்ல தாமதித்தமைக்காக வெகுண்டானே பொறுமை காக்கவேண்டிய செங்காவித்துறவி எங்கும் எப்பொழுதும் தமிழர்களுக்கு நெருக்குதலும் அச்சமூட்டலும் அவமானமும் பாதுகாப்பின்மையுமே
மிகுதியாக நிரம்பியிருக்கும் நாட்டில் தமிழர்கள் இயல்பாக கூவமுடியாத குயில்களாகவே வாழும் நிலையில் அந்நாட்டுக்கு அடியெடுத்து வைப்பது ஆபத்து
என்பதனை அனைத்து உறவுகளும் உணர்ந்துகொள்ளுதல்வேண்டும் பணம் இருப்பதனால் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் காட்டி வர விரும்புவோர்களே
உங்களை வீட்டுக்குள் வந்து அடிக்கவும் அணைக்கவும் சுடவும் கடத்தவும் ஆயுதமேந்தியவர்களுக்கு தகுந்த சுதந்திரமுண்டு ஆள்புலத்தினரால் என்பதனை
நினைவில் கொள்ளுதல் நல்லது தன்மானத்துக்கும் மனித உரிமைக்கும் மதிப்பில்லா ஆள்புலத்துக்குள் நுழைவது புத்தி சாலித்தனம் இல்லை மடியில் கை
வைத்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொள்ளுங்கள் உங்களையே நல்ல பதில் கிடைக்கும் உங்களால் உங்களுக்கு .அவுஸ்ரேலியாவுக்கு
கப்பலில் சென்ற சிறுமி இந்தோனேசியாவில் பிடிபட்டு நிற்கையில் சொன்னாரே எங்களை எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் அனுப்புங்கள் ஆனால் சிறிலங்காவுக்கு வேண்டாம் என்றதை இலகுவாக மறந்துவிடமுடியாது.உயிரின் வலி என்ன என்பதனை நன்கு புரிந்த மக்கள் போகமாட்டார்கள் புல்லர்கள்
தேசத்துக்கு பூனைக்கு இருக்கும் அறிவு சமயத்தில் நமக்கும் வேண்டும்.அங்கு இல்லாமல் தவிப்போருக்கு உதவி செய்வதே மனதுக்கு இதம் தரும் என்ற
உண்மையினை அனைவரும் புரிந்துகொண்டால் உங்கள் நெஞ்சுக்கு உண்மையான இன்பம் வரும்.

கைகூவியோன்
ம.இரமேசு.

வெள்ளி, 2 மே, 2014

மெய்சிலிர்க்க வைக்கும் டென்மார்க் இளந்தலைமுறை கலைஞர்கள்

பெருமையாக இருக்கின்றது நம் பிள்ளைகளின் கலைப்பங்களிப்புக்களும் போட்டிகளில் அவர்கள் வென்று வரும் பரிசில்களும் ஒரு புதிய மேக எழுச்சியை டென்மார்க் வாழ் தமிழர்களுக்கு கொண்டுவந்து சேர்க்கின்றது இதற்கு அடித்தளம் இட்ட மூத்த கலைஞர்களே பெரிதும் பாராட்டுக்குரியவர்கள் அந்த வரிசையில் இயல் இசை நாடகம் ஆகிய மூன்றையும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் பெரிதும் மரியாதைக்குரியவர்களே அவர்களின் வழிநடத்துதலில் பிள்ளைகள் பெரும் திறமையை உலகுக்கு காட்டி மாபெருங் கலைஞர்களாகின்றார்கள் ஒருபக்கம் திரைப்பட தயாரிப்பில் வசந்தும் அவரின் குழுவும் சலிக்காது அஞ்சாது வீர நடை போடுகின்றார்கள் மறுபக்கம் அர்ச்சனாவின் குரலில் தமிழ் குளிர்கின்றது எல்லாவற்றையும் பின்னாலிருந்து ஆசிரியர் நடத்திவைக்கும் அழகு அபாரம் என்பது அவரை உணர்ந்தோருக்கு புரியும்.

இன்னொரு பக்கம் நடிக வினோதரின் வாரிசுகள் இசை நாட்டியம் என்று ஒளிப்பதிவுடன் கண்கவரும் காட்சிகளூடாக களை கட்டுகின்றார்கள் அன்புத் தம்பி டிலக்சன் அமைதியாக இருந்துகொண்டுபாட்டால் வெற்றிக்கொடி ஏற்றுகின்றார் அவ்வாறே இளங்கோவும் நல்ல பாடகருக்கான தகுதியை உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கின்றார் இவர்களின் குரல்கள் தமிழுலகுக்கு வரப்போகும் பெரும் சாதனைக்குரல்களாகும் என்பதில் ஐயமில்லை இது தவிர பாடல் புனைவது படமாக்குதல் நாட்டியம் அமைத்தல் என்று சகல துறைகளிலும் நம் பிள்ளைகள் அசத்துகின்றார்கள் என்பது அவர்களின் ஆக்கங்களை காண்கையில் உணரக்கூடியதாக உள்ளது குறும்பட தயாரிப்பில் பல நகரத்து பிள்ளைகள் ஈடுபட்டு வருகின்றார்கள் பரனைட்டு என்று வழங்கும் குறும்படம் பார்ப்பவர்களை கொள்ளைகொள்கின்றது நோர்வே பட விழாவுக்கும் தகுதி பெற்று செல்கின்றது

வரவிருக்கும் உயிர்வரை இனித்தாய் படம் மூலம் ஐரோப்பாவிலிருந்து புதிய தொழில் முறை கலைஞர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் டெசோபன் படம்பிடிக்கும் உன்னதம் உலகு அறிய விருக்கின்றது அதுபோல் வசந்தின் இசையமைப்பும் எல்லோரையும் அசத்தும் என்பதில் மாற்று கரு இருக்க வாய்ப்பில்லை என்னடி ராக்கம்மா பாடலை வித்தியாசமாக தனது பாணியில் இசையமைத்து

அசத்தியிருக்கின்றார் அதற்கு அவர் சக்கரை தண்டா போட்டு ஆடும் ஆட்டம் திரையில் பின்னி எடுக்கப்போகின்றது என்பதை படத்தின் முன்னோட்டத்தில் காணமுடிந்தது நம்மவர்கள் செழிப்பே நமக்கு பலம் என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும்

நமது பிள்ளைகளின் ஆக்கங்களுக்கு கைகொடுக்க உற்சாகப்படுத்த பேதங்களை மறந்து தயார் நிலையில் இருங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றேன் .

அன்புடன்

ம.இரமேசு