மானிட உயிரின் மாண்பினை மதி அன்றேல் அழிவே நமது கதி
மனிதனே!! உன்னைப்போல் சகல உணர்வுகளும் கொண்டதே இன்னொரு உயிரும், அதை நீ மதி . உனக்கு கிட்டவில்லை என்பதற்காக அவ்வுயிரை வெறுப்பில் கொலை செய்யாதே. மற்றவர்கள் விருப்பும் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்ந்து மகிழ்வதே. எல்லோர் விருப்பமும் மகிழ்வை நோக்கியே அதற்காகவே வாழ்கிறோம் . மற்றவரை நீ மதிக்காவிட்டால் இன்னொருவர் உயிரை துச்சமாக எண்ணினால் உனது உயிரும் பிறரால் அவ்வாறே எண்ணப்படும் நீயும் கொலைபடுவாய் . ஆதலால் இன்னொருவரை கொலை செய்ய எண்ணாதே.
திரைப்பட காட்சிகள் உண்மையான வாழ்வு ஆகாது . அதை நம்பாதே .
காதல் உணர்வு மாந்தர்க்கு பொதுவானது அதன் வழியில் துணை தேடுவது ஒவ்வொருவரின் உரிமை . அவ்வுரிமையை ஒழுங்கான முறையில் பயன்படுத்துதல் வேண்டும் . ஒருவரை ஒருவருக்கு பிடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை . விருப்பை சொல்லு பதில் இல்லை என்றால் பழிவாங்கத் துடிக்காதே பாபம் செய்யாதே . காட்டுமிராண்டிபோல் செயற்பட்டு சிறையில் அடிவாங்கி நோகாதே . வாழ்வு ஒரு பெண் சம்பந்தம் மட்டுமன்று . பெண்ணின்பம் இல்லாமல் பலர் வாழ்கிறார்கள் உலகிலே அவர்கள் எல்லோரும் பழிவாங்க எண்ணினால் உலகில் அழகிகள் இரார் . ஒவ்வொருவருக்கும் அளந்ததே கிட்டும் என்று எண்ணு கிட்டாததற்குப் போராடுதல் அறிவாகாது . கிட்டாதாயின் வெட்டென மற . தனிப்பட்ட உனது அறிவு விருத்திக்கு போராடு பயில் முயற்சியை தொடர் ஆனால் இன்னொரு உயிரை உன்பால் நகர்த்திட உலகு வெறுக்கும் செயல்கள் செய்யாதே.
இந்தியாவில் சட்டங்கள் இளகி இருக்கிறது. இதன் காரணமாகவே கொடிய கோரமான கொலைகள் துணிவுடன் நடத்தப்படுகிறது . தண்டனையில் மனிதாபிமானம் நுழைவது அச்சமின்றி குற்றம் புரிய கொடூரர்களுக்கு ஏதுவாக இருக்கிறது . சட்டத்தின் தண்டிப்பால் நிரபராதி தவறுதலாக கொலைப்படக்கூடாது என்பதனாலேயே தண்டனை மனிதநேய அடிப்படையில் சற்று தளர்வாக வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா போல் பொதுமக்கள் காண கற்கால வழக்கப்படி தலையை வெட்டி கொல்லும் நடைமுறை இந்தியாவில் இருந்தால் எவர் பிறரை கொலை செய்ய எண்ணுவார் ?
கோடீஸ்வரர்கள் சட்டத்தை, தீர்ப்பை, தண்டனையை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை இந்தியாவில் இருக்கும் அசுத்தம். இதன் காரணமாக பணக்காரர்கள் அச்சமின்றி அசுத்த வேலைகள் செய்கிறார்கள் . பணம் பதவி இருப்பதனால் காவலர்களையே கைநீட்டி அடிப்பதும் திட்டுவதும் நடந்தேறிவருகின்றது. நடிகர் ஒருவர் மது போதையில் வண்டியோட்டி காவல் துறை வண்டியுடன் மோதினார், மேலிடத்து செல்வாக்கால் வெளியில் வந்து மேடையில் நின்று உற்சாகமாக கதை பேசுகிறார் . இதுவே சாதாரண மனிதராக இருந்திருந்தால் காவல் அதிகாரிகள் அடித்தே கொலை செய்திருக்கக்கூடும் . விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து சாக்காட்டப்பட்டவர்கள் ஒன்றா இரண்டா இந்தியாவில் . நல்லதை எண்ணி நல்வழியில் செல்வோம் . பிறரை வருதத்தி இன்பம் காண தவறில் கூடாத செய்கையில் வெற்றித் தோள்கொட்டிட எண்ணோம் . வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து.
ஆக்கம்
ம.ரமேஸ்