சனி, 3 செப்டம்பர், 2016

மானிட உயிரின் மாண்பினை  மதி  அன்றேல் அழிவே நமது கதி 

மனிதனே!!  உன்னைப்போல்  சகல  உணர்வுகளும்   கொண்டதே  இன்னொரு உயிரும்,  அதை  நீ   மதி . உனக்கு கிட்டவில்லை என்பதற்காக  அவ்வுயிரை  வெறுப்பில் கொலை  செய்யாதே. மற்றவர்கள்  விருப்பும் இவ்வுலகில்  நீண்டகாலம்  வாழ்ந்து  மகிழ்வதே.   எல்லோர்  விருப்பமும் மகிழ்வை  நோக்கியே   அதற்காகவே  வாழ்கிறோம் .  மற்றவரை  நீ  மதிக்காவிட்டால்  இன்னொருவர்  உயிரை  துச்சமாக  எண்ணினால்  உனது  உயிரும்  பிறரால்  அவ்வாறே  எண்ணப்படும்   நீயும்  கொலைபடுவாய் .  ஆதலால்  இன்னொருவரை  கொலை செய்ய  எண்ணாதே. 
திரைப்பட  காட்சிகள்   உண்மையான  வாழ்வு  ஆகாது .  அதை  நம்பாதே  . 

காதல்  உணர்வு  மாந்தர்க்கு  பொதுவானது   அதன்  வழியில்  துணை தேடுவது ஒவ்வொருவரின்  உரிமை .  அவ்வுரிமையை  ஒழுங்கான  முறையில்  பயன்படுத்துதல்  வேண்டும் .  ஒருவரை ஒருவருக்கு  பிடிக்க வேண்டும் என்று கட்டாயம்  இல்லை .  விருப்பை சொல்லு  பதில்  இல்லை என்றால்  பழிவாங்கத் துடிக்காதே  பாபம்  செய்யாதே .  காட்டுமிராண்டிபோல்   செயற்பட்டு   சிறையில்  அடிவாங்கி  நோகாதே . வாழ்வு  ஒரு  பெண்  சம்பந்தம் மட்டுமன்று . பெண்ணின்பம்  இல்லாமல்   பலர்  வாழ்கிறார்கள்  உலகிலே   அவர்கள் எல்லோரும்  பழிவாங்க எண்ணினால்  உலகில்  அழகிகள்  இரார் . ஒவ்வொருவருக்கும் அளந்ததே  கிட்டும்  என்று  எண்ணு  கிட்டாததற்குப்   போராடுதல்  அறிவாகாது . கிட்டாதாயின் வெட்டென  மற .  தனிப்பட்ட  உனது  அறிவு  விருத்திக்கு  போராடு  பயில்  முயற்சியை தொடர்  ஆனால்  இன்னொரு  உயிரை  உன்பால்  நகர்த்திட  உலகு  வெறுக்கும் செயல்கள்  செய்யாதே.  

இந்தியாவில் சட்டங்கள்  இளகி  இருக்கிறது. இதன் காரணமாகவே  கொடிய கோரமான   கொலைகள் துணிவுடன் நடத்தப்படுகிறது . தண்டனையில்  மனிதாபிமானம்  நுழைவது  அச்சமின்றி   குற்றம்  புரிய கொடூரர்களுக்கு   ஏதுவாக  இருக்கிறது . சட்டத்தின் தண்டிப்பால்  நிரபராதி  தவறுதலாக  கொலைப்படக்கூடாது  என்பதனாலேயே  தண்டனை மனிதநேய  அடிப்படையில்   சற்று  தளர்வாக  வைக்கப்பட்டுள்ளது.     சவூதி  அரேபியா போல் பொதுமக்கள்  காண கற்கால  வழக்கப்படி   தலையை   வெட்டி  கொல்லும்  நடைமுறை  இந்தியாவில்  இருந்தால்  எவர்  பிறரை  கொலை செய்ய  எண்ணுவார் ? 

கோடீஸ்வரர்கள்  சட்டத்தை, தீர்ப்பை, தண்டனையை   பணம் கொடுத்து  வாங்கிவிடும்   நிலை  இந்தியாவில்  இருக்கும்  அசுத்தம்.  இதன் காரணமாக  பணக்காரர்கள்  அச்சமின்றி  அசுத்த வேலைகள்  செய்கிறார்கள் . பணம்  பதவி  இருப்பதனால்  காவலர்களையே  கைநீட்டி அடிப்பதும்  திட்டுவதும்   நடந்தேறிவருகின்றது. நடிகர் ஒருவர்   மது  போதையில்  வண்டியோட்டி  காவல்  துறை  வண்டியுடன்  மோதினார்,  மேலிடத்து  செல்வாக்கால்  வெளியில் வந்து   மேடையில்  நின்று உற்சாகமாக  கதை பேசுகிறார் . இதுவே  சாதாரண  மனிதராக  இருந்திருந்தால்  காவல் அதிகாரிகள்  அடித்தே  கொலை செய்திருக்கக்கூடும் . விசாரணைக்கு  அழைத்து சென்று  அடித்து  சாக்காட்டப்பட்டவர்கள்  ஒன்றா  இரண்டா  இந்தியாவில் . நல்லதை  எண்ணி  நல்வழியில்  செல்வோம் . பிறரை  வருதத்தி  இன்பம்  காண தவறில் கூடாத  செய்கையில்  வெற்றித்  தோள்கொட்டிட  எண்ணோம் .  வலியார் முன் தன்னை  நினைக்க  தான்  தன்னின்  மெலியார்மேல் செல்லுமிடத்து.

ஆக்கம் 
ம.ரமேஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக