சீகன் பால்க் நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
பிறந்த தினம் ஜூன் 20, 1682
நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
** இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
1682 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.பெற்றோர் பர்த்தலோமேயு - கத்தரின் .இவருடைய தந்தை பர்த்தலோமேயு நவதானியங்களை விற்பனை செய்து வந்த வணிகர்.சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார்.சீகன்பாலின் தாயார் பக்தி நிறைந்தவர்.இவரின் தாயார் மரணப்படுக்கையில் கூறி வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும் இறந்தார்.
சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் இவரது பெயருக்கு அருகில் சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன் (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். இவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் இவரை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. இவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. இதன் விளைவாக இவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றியது. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் இவரில் எழுந்தது.
1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார்.உடல் நலம் சரி இல்லாததால் இவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் இவர் அடிக்கடி
உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார்.அங்கு இவர் எபிரேய மொழியைக் கற்றார்.
சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய உடல் பலவீனத்தினால் இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Henrich Pluetchau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.
அப்போஸ்தலர் நடபடிகளின் நூலின் அடிப்படையில் ஓர் சிறப்பு செய்தியை மன்னரின் குடும்பத்திற்கு சீகன்பால்க் அளித்தார். அந்த நாள் முதல் அரச குடும்பத்துடன் மிகுந்த நட்பு ஏற்பட்டது. இவரது மரணம் வரை அந்த நட்பு தொடர்ந்தது.
1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதி இருவரும் மன்னர் சார்பில் அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டார சீகன்பால்க். தனது கடற்பயணத்தை மரணக் கல்விச் சாலை (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது The General School of True Wisdom என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.
இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில் 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.. தரங்கம்பாடிக்கு வர அனுமதியாமல் மூன்று நாட்கள் கப்பலில் தங்கும் நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தினார்.அனைத்து சூழ்நிலைகளும் இவர்களுக்கு எதிராய் செயல்பட்டன. டென்மார்க் அரசனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என்று மக்கள் இவர்களை சந்தேகிக்கப்பட்டனர்.இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை முதல் மிஷனரிகள் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சகித்தனர். பின்னர் அடிமைகளாக எண்ணப்பட இந்திய ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் சென்று தங்கினர்.
சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார்.எல்லய்யா என்பவரிடம் தமிழ் கற்றார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார்.
தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
சீகன்பால்க் ஐரோப்பியர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்தயும் தமிழர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.
ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயத்தை ஏற்படுத்தினார்.
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் இவர் வாங்கினார். பொறையாற்றில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
சீகனின் மிஷனெரிப் பணிக்கு, கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று ஹாசியஸ் கருதினார்.சீகனின் வீட்டிற்குள் நுழைந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த இவரைக் கைது செய்தனர். கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில் இரண்டு ஜெர்மன் வீரர்கள் இவருக்கு உதவி செய்தனர் .இருவரும் ஜன்னல் வழியாக காகிதமும் பேனாவும் மையும் சீகனுக்குக் கொடுத்து உதவினர் .அங்கு ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை இவர் எழுதினார்.
தமிழ்நாட்டு மக்கள் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே சீகன் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
மொழி இவருக்குப் புதிது.யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை.வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவினார்.இதுவே இந்தியாவைன் முதல் அச்சுக்கூடம் ஆகும்.தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தம்பிரான் வணக்கம் என்ற நூல் ஆகும்.
1715, ஜூலை 15ஆம் தேதி தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. இவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிசெய்யத பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். இவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.இவர் மரியா டாரதியை திருமணம் செய்தார்.1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில புத்தகங்களையும் எழுதினார். தென்னிந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும், தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் எழுதினார்.
நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ் - ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா - விடை புத்தகமும் இவரால் எழுதப்பட்டது.
1719ஆம் ஆண்டு, பிப்ரவரி 23ஆம் தேதி தரங்கம்பாடியில் தமதி 37ஆம் அகவையில் காலமானார்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்தார்.