எனது ஆசான் மதிப்புமிகு ஆசிரியர் கே எஸ் துரை ஐயாவின் உரையிலிருந்து
.
கர்ணனும் கும்பகர்ணனும் ஓர் ஒப்பீடு பரதசங்கம உரை..
October 12, 2014

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தெய்வத்தையும் நிராகரித்த இரு நன்றியுள்ள மனிதர் கதை..
டென்மார்க் கலாக்கேந்திரா ஆடற்கலையகம் நடத்திய பரத சங்கமம் நிகழ்வில் பேசிய ஆசிரியர் கி. செல்லத்துரை கர்ணனும் கும்பகர்ணனும் என்ற விடயம் பற்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இசை வேளையின்போது வயலின் வித்துவான் நெய்வேலி இராதாகிருஷ்ணன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்ற கர்ணன் திரைப்பட பாடலை இசைத்து அரங்கத்தை கட்டிப்போட்டார்.
அடுத்து வந்த உரையின்போது கர்ணனின் சிறப்பையும் – கும்பகர்ணனின் சிறப்பையும் ஒப்பிட்டுக்காட்டி அவையின் சுவைத்தலுக்கு மெருகூட்டினார் ஆசிரியர்.
கவலையைத் தீர்க்கும் நாட்டியத்தை காணும் இந்த மேடையில் துன்பமான இந்தப் பாடலை நெய்வேலியார் ஏன் இசைத்தார் என்று பலதவைகள் யோசித்துப் பார்த்தேன்.
கர்ணன் குருவிடம் பொய் உரைத்த காரணத்தினால் அவரிடமிருந்து உற்ற போரில் கற்றது மறப்பாய் என்று சாபம் பெற்று வித்தைகளை மறந்து மரணத்தில் கிடந்தபோது இந்தப்பாடல் வருகிறது.
ஆகவே இந்த அரங்கில் உள்ள மாணவர்களும், பெற்றோரும் குரு பக்தி குறித்து சிந்திக்க வேண்டும் என்பதையே அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று உணர்கிறது.
இராமாயணப் போரிலும் – பாரதப்போரிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிர் கொடுத்த பாத்திரங்கள் இருவர் வருகிறார்கள் இராமாயணத்தில் இராவணனின் தம்பி கும்பகர்ணன், பாரதத்தில் துரியோதனனின் நண்பன் கர்ணன்.
இந்த இருவருமே கர்ணன் என்ற பெயரால் ஒற்றுமைப்படுகிறார்கள், தோல்வியடந்தாலும் கடவுளே போருக்கு வந்திருப்பது தெரிந்;தாலும் விலை போவதைவிட இறப்பதே மேல் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள்.
மண்ணில் உயர்வுடன் வாழ்ந்து தெய்வங்களையே சதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளிய ஆற்றலாளர்.
சாகாவரம் கேட்டு கும்பகர்ணன் தவமிருக்க அவனுக்கு என்ன வரவேண்டும் என்று இறைவன் கேட்கிறார்.
அவன் சாகாவரமாகிய நித்திய வரம் தாருங்கள் என்று கேட்க சரஸ்வதி அவன் நாக்கில் இருந்து ஒரு புறம் அழுத்தித் தடுமாற வைக்க நித்திய வரம் என்பதற்கு பதிலாக நித்திரை வரம் என்று கேடடான் என்று கூறுவார்கள்.
அதுபோல தான் பிராமணன் அல்ல என்பதை கர்ணன் பரசுராமரிடம் சொல்லாத காரணத்தால் வண்டாக வந்து அவன் தொடையை துளைப்பான் கண்ணன்.
குருவின் உறக்கம் கலையக்கூடாது என்பதற்காக இரத்தம் ஓட ஓட பொறுமை காப்பான் கர்ணன்.. கண் விழித்ததும் குருவான பரசுராமர் இரத்தத்திற்கு பயப்படாத கர்ணன் பிராமணன் அல்ல என்று முடிவு செய்து அவனுக்கு உற்ற போரில் கற்றது மறப்பாய் என்று சாபமிட்டார் என்பது கதை.
இதுபோல பாரதத்தில் பல கிளைக்கதைகள் உண்டு :
பாவம் செய்த துரியோதனன் பதினாறு இலைகளில் பதினாறு கறிகளை போட்டு சாப்பிடுவானாம், அவன் ஒரு பிடி அள்ளி சாப்பிட்டதும் மிகுதி உணவு புழுவாக மாறிவிடும், இதனால் பதினாறு இலைகளில் பதினாறு கறிகளையும் குழைத்து பதினாறு பிடிகள் பிடித்து ஒவ்வொரு இலையாகச் சாப்பிடுவானாம்.
இதுதான் பதினாறு கறி சோறு கதை.. ஒரு நாள் இந்த இலை ஒன்றில் கர்ணன் கை பட்டதும் உணவு புழுவாக மாறுவது அடியோடு நின்றுவிட்டதாம்…
அதனால் மகிழ்ந்த துரியோதனன் காலமெல்லாம் கர்ணனுக்கு போட்ட சோறே செஞ்சோற்று கடனானது.
கும்பகர்ணன் தூக்கத்தையே வரமாகப் பெற்றதால் உழைப்பின்றி உறங்கிக் கிடந்தான்.
அவனால் வருமானம் இல்லாவிட்டாலும் தம்பி என்ற பாசத்தினால் உறக்கத்தில் உணவூட்டி அவன் உயிர் காத்தவன் இராவணன் இதனால் அவனுக்காக உயிர் கொடுத்தான் கும்பகர்ணன்.
இந்த இருவருமே தின்ற சோத்துக்காக உயிர் கொடுத்தார்கள் உயர்வு பெற்றார்கள்..
அன்னமிட்டவனையும், கல்வியிட்டவனையும் ஒரு காலமும் மறக்கக்கூடாது என்பது இவர்கள் இருவரதும் கதையாகும்.
ஆகவே நன்றி மறவாத மனிதராக வாழ்ந்தால் தோற்றாலும் இருவரும் வென்றார்கள் என்றார்.