இது பூத்திருந்தும் வாசமில்லா மலர்வாழ்வு
காரோடும் வீதியெல்லாம் தமிழன் தேரோட்டி
கார்காலப்பொழுதினிலும் கண்ணயராது கையாட்டி
சேர்ந்து வந்த துன்பமெலாம் உழைப்பால் பேயோட்டி
கரை சேராதா ஓடமாகி வாழ்கின்றான்
பூவோடு பொட்டிட்டு புன்னகைத்த பூவையரும்
காரோடிக் காசுழைக்க வீதியிலே இறங்கிவிட்டார்
யாரோடும் பேதமில்லை ஊரோடு ஒத்துழைத்தே
உன்னதமாய் உயர்ந்து நின்றே உலைவின்றி வாழ்கின்றார்
தாயோடும் தந்தை சேயோடும் தம்பியர் உறவினர்
என்றிருந்த காலம் போய் தனியாக வாழுமொரு
தீயாகச் சுடும் வாழ்விங்கு சிலருக்கு
இது பூத்திருந்தும் வாசமில்லா மலர்வாழ்வு
காத்திருந்து காத்திருந்து கலியாணங் கட்டியவன்
நேற்று வந்தவளால் தாய் நேசம் மறந்தானே
பூ வாசம் சில காலத்தில் ஓய்ந்த பின்னே
வணங்கிடுவான் தாயென்னும் ஆலயத்தை
அழுக்காறு நெஞ்சத்தில் பொங்கிவர
ஆகாசம் பார்க்கின்றார் போத்துடனே
பெருஞ் செல்வம் பேதமையால் தொலைத்திட்டே
பெருந் தொல்லை கொண்டே தான் வாழ்கின்றார்
ஊழினை மேதினியில் யார் தடுப்பார் ஆனாலும் உஞற்றிவிடு
உனக்கும் ஒரு காலம் வரும் உள்ளத்து அல் தன்னை
ஓட்டிவிடு நெஞ்சமெனும் நெய்தலிலே நீந்தி நீயும்
பஞ்சமெனும் ஆழத்தில் அமிழ்ந்திடாதே
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக