சனி, 31 ஜனவரி, 2015

உணர்வின்  பிரதிபலிப்பை உடனே  காட்டுவது மிருகம்
உணர்வை அடக்கி பொறுமை காப்பதே மனிதம் .
பழிக்குப்பழி  வாங்கல்  மனிதமன்று.
நம்மைக் காயப்படுத்தியவர்  வேறு ஒருவரால்
காயப்படுவார்.  மனிதமில்லாதவரிடம்
அவரின்  செயல்  தைக்கும் பொழுது  மனிதம்
இல்லாது  பிரதிபலிப்பை அடைவார்
அங்கே இருவரும் மிருகங்களே . 

திங்கள், 12 ஜனவரி, 2015

 மெல்லிய இருள் சூழ்ந்த  மாலைப்பொழுது , அன்புத் தீபமொன்று  அணைந்து  ஆறுமாதங்கள்  செல்லாப் பொழுது, தங்கையென்னும் அழகிய  மலரொன்று  வாடி வதங்கி அக்காளுக்காக ஏங்கித்தவிக்கும்  நிலை,  நிழல் கொடுக்கும் மரமாகி  நின்ற  அன்னையும்  அணையும்  தீபமாக  அல்லாடிக்கொண்டிருந்த வேளை, அக்காள்  அணைந்த பொழுது,  எங்கே  அக்கா!எங்கே அக்கா !  என்று கேட்ட  ஐந்து வயது  சிறுமிக்கு,   அக்கா  கடவுளிடம் 
சென்றுவிட்டாள்  என்று  சொந்தங்கள் சமாதானம்  மொழிந்தன, அனுசியா   களவு பொய் அறியா  சிறிய
வயதினள், எல்லோரும் சொன்னதை நம்பியபடி  கால மோட்டி வந்தாள், இதோ  இன்று   அன்னையென்னும்  அன்பு மரமும்  நிழல்  தருவதை  நிறுத்தப் போராடும் வேளை , அம்மாவுக்கு
என்ன  அம்மாவுக்கு  என்ன  என்ற சிறுமிக்கு,  அம்மா  கடவுளிடம் போகப்போகின்றா, என்று  அங்கிருந்தோர்  பக்குவமாகச்   சொல்ல , தான் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொட்டியயை (சல்லி முட்டி)எடுத்து குலுக்கி குலுக்கி  முழு சில்லறையையும் அனுசியா  எடுத்துக்கொண்டு சிறு  தொலைவில் இருந்த  கடைக்கு சென்று  ஒரு  பொம்மை  வாங்க  விரும்பினாள் - பொம்மை விலையோ  20 ரூபாய்  அவள் கையில்  17 ரூபாய்  28 சதமே  இருந்தது.   கடைக்காரனிடம்  கெஞ்சினாள்  பிறகு மிகுதி தருவதாக சொன்னாள்  -  காட்டில்  விளையும் நச்சு மரம்  கடைக்காரன் மனம்,  முடியாது என்று  அறவே  மறுத்துவிட்டான் , நடப்பவைகளை பக்கத்தில் நின்று  கவனித்துக்கொண்டு  நின்றார்  ஆசிரியர்  அருணாசலம்,  சிறுமியை அணுகி  என்ன  ஏது என்று  கேட்டார்,  அவள் சொன்னாள்  - அக்கா  கடவுளிடம் போய்விட்டா  இப்பொழுது  அங்கு செல்ல அம்மாவும்  தயாராகிறா  அக்காவுக்கு  பொம்மை என்றால்   மிகவும்  விருப்பம்  அதுதான்   இந்த அழகான பொம்மையை  வாங்கி  அம்மாவிடம் கொடுக்க  ஆசைப்படுகின்றேன்,  ஏனென்றால்  கடவுளிடம் செல்லும் அம்மா  அக்காவை சந்திப்பா அக்காவிடம் இந்த பொம்மையை கொடுத்தால்  அக்கா மிகவும் மகிழ்வாள்  அதுதான் என்றாள்,     இறந்த அக்காளைவிட 2 வயது   இளையவளான  அந்தச் சிறுமி. ஆசிரியர் தனது  நிலையை  சமாளித்தவாறு  மிகுதிப்  பணத்தை செலுத்தி  அந்த பொம்மையை வாங்கிக்கொடுத்தார் , பொம்மை கிடைத்த மகிழ்வுடன்  வீட்டுக்கு ஓடினாள்  அனுசியா , அங்கு எல்லோரும் ஓவென்று  குளறி  அழுதுகொண்டிருந்தார்கள் -  ஆம்  அனுசியாவின் பொம்மையை வாங்காமலேயே   அம்மா  கடவுளிடம் சென்றுவிட்டார்  .