சனி, 20 பிப்ரவரி, 2016

வட்டுக்கோட்டை - ஊர்ச்சிறப்பு 

ஈழத்தின் முக்கிய ஊர்களில் தனியிடம் வட்டுக்கோட்டைக்கு உண்டு .


வீரபத்திரர் சுவாமியை  இதயமாக வைத்து சுற்றி வாழும் வட்டூர்மக்கள் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று பார் புகழ் சிறப்புடன் வாழ்பவர்கள். 

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தொழிற்றுறைகளில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் ,  திகழ்பவர்கள் வட்டூரார்.

கல்வி கேள்வி ஞானம் பெற்ற முழு மதியினை ஒத்த மனிதர்கள் வாழ்ந்த, வாழும்  பூமி வட்டுக்கோட்டை, ஆதலால் அங்கு கல்வியும் கலைகளும் பால் நிலவாகப்  பொழிகின்றன . முன்னோரின்  எச்சங்கள் தந்தையர் வழியில் புகழ் பூத்த மலர்களாக இன்று உலகெங்கும் வாசம் பரப்புகிறார்கள்.

சிந்தனையும் செந்தமிழும் ஒன்றையொன்று பின்னியிருக்கும் வட்டூரிலிருந்து , எட்டூர்கள் கேட்க ஆலயமணியின் கொட்டாக அவர் தம் புகழொலி பரவியது ஈழமெங்கும். (ஈழம் = இலங்கை )


இலங்கையின் இராச மருத்துவ நிபுணராக  விளங்கியவர்  அமரரான  பரியாரியார்  குமாரசாமி  வட்டூருக்கு  புகழ் வேய்ந்த  பொன்மறவர் .

மா தமிழ் ஒள்ளியர்  நல்லதம்பி புலவர்  என்னும் தமிழ்வாரி  இலங்கையின் தேசிய கீதத்தை  தமிழாக்கம் செய்த மாபெரும்  தமிழ் பேராசான் ஆவார்  .
அவர்களது வழியில் நாற்கவிராசர்  தமிழ் விற்ப பொன்முடி  பேராசான்  அமரர் மயில்வாகனனார் - கற்பித்த  பாடசாலைகள்  எங்கும்  மாணவர்கள்  தமிழ்ப் பொறி  கக்க  பெருஞ் சேவையாற்றிய  பெருமான். நிறை  நூல்களை  வெண்பாக்களை  இறை  போற்றுதலை  தனது தமிழ் புலமை வழியாக  உலகுக்கு  அருளிய  தமிழ் அமுதக்கடல் அன்னார் அவர்கள்.  

 இன்று இலங்கையில்  புகழுடன் திகழும் சுவாச மருத்துவ நிபுணர்  திருமாறன் பாலகிருஷ்ணன் வட்டூர் வாசியே. தாய்லாந்து நாட்டின்   அரச  மரியாதை
பெற்ற  மா மருத்துவர் .


எதிர்காலத்தில்  சேவை ஆற்ற  இன்று  பல்வேறு நாடுகளிலும்  வட்டூர் பிள்ளைகள்  திறமையாக  கற்றுவருகிறார்கள் . அண்மையில்  திரவியராசா விசயலட்சுமி  தம்பதிகளின்  புதல்வி  மருத்துவராக தேறியுள்ளார்கள்  . 

மருத்துவம்,பொறியியல்,சட்டம்,கணக்கியல் போன்ற துறைகளில் நாடெங்கும் சிறந்துவிளங்கினார்கள் வட்டூரார்கள். அவை மட்டுமன்றி சிற்பக் கலை , கட்டிடக் கலை போன்றவற்றிலும் ஒப்பாரும் மிக்காருமிலாது நாடெங்கும் புகழ் கொண்டிருந்தார்கள். 


 சிற்பச் சிகாமணி  சிற்பச் சக்கரவர்த்தி என இலங்கை  அரசாலும் மக்களாலும் அழைக்கப்பட்ட  அமரர் செந்தூர்ராசா வட்டுமண்ணின் மைந்தனே. அவரை அறியாத ஈழத்து கோயில்களின்  அறங்காவலர்கள்  இல்லை எனலாம்.

"காபன்" கந்தையா என்ற மாபெரும் பேரறிஞர் வாழ்ந்ததும் வட்டூரிலேயே அவரே  இலங்கையின்  அதிசிறப்பு வாய்ந்த உயர்தகுதி  அதிபர்  என்ற தரத்தினை  முதல் முதலாகப் பெற்றவர் .


நாட்டுக்கூத்து என்னும் ஒப்பற்ற கிராமியக்கலையினை இன்றளவும் போற்றிக் காப்பற்றிவருபவர்கள் வட்டூர் கலைஞர்களே - வெளிநாட்டிலும் ஆடுகின்றார்கள்  குறிப்பாக  பிரான்ஸ் நாட்டில்   ஆடி அக்கலைதனை அழியாது  பாதுகாக்கிறார்கள்  மகிழ்விக்கிறார்கள் .

கலைகளின்பால்  பேரார்வம்  கொண்டதனால்  தங்கள் ஊரின்   ஒரு பகுதிக்கு கலை நகர்  என்று பெயர் சூடி  மகிழ்ந்துவரும் உன்னத  மக்கள் வட்டூர் மக்கள் .


இயல் இசை நாடகம் என முக்கலைகளிலும் முன்னேறி பளிச்சிட்டவர்கள் வட்டூர்  கலைஞர்கள், கலைகள் மட்டுமன்றி படகு கட்டுதல், பழுது பார்த்தல் என அடிப்படைத் தொழில்கள் அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள் வட்டூரார் என்றால் மிகையில்லை.

ஈழத்தின் பல பாகங்களிலும் கட்டிடங்கள் கட்டுவதில் பெயர்போன சிறந்த கட்டுவேலை செய்யும் கலைஞர்களை கொண்டது வட்டூர்.
அழகிய பெரிய வீடுகள் ஈழத்தில்  கண்ணில் தென்பட்டால் அதன் பின்னால் எப்படியும் வட்டூர்க்  கலைஞர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டுதல் , நெசவு நெய்தல் ,  விழாக்களுக்கு அலங்கரித்தல், மின்னிணைப்பு வழங்குதல் போன்ற தொழில்களும் குறைவின்றி கோலோச்சுவது வட்டூரில்.  

விளையாட்டில் - கைப்பந்து, காற்பந்து, துடுப்பாட்டம், கிளித்தட்டு என பல்வேறு விளையாட்டுக்களும் இனிதே வலம் வருவது   வட்டூரில் .

வட்டு சிவன் கொடி ஏறினால் ஊரே பக்திப்பரவசத்தால் திளைக்கும். இலங்கையின்  பல பாகங்களிலும் தொழில் புரியும்  வட்டூர் வாசிகள்  ஊருக்குள் வந்து நிறைவார்கள், இரவுத் திருவிழாக்கள் கலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு போட்டி போடும், மின்விளக்கால் ஊரே பல வர்ணத்தில் ஜொலிக்கும்.

வட்டூர் வராத ஈழத்தின் கலைஞர்கள் யாரென்று விரல் விட்டு எண்ணிவிடலாம்,  ஈழத்தின் புகழ்பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்கள் தொடங்கி நாட்டிய மயில்கள், இசைக்குழுவினர்கள்  , வயலின் மேதைகள், நாடக நடிகர்கள், வில்லுப்பாட்டு குழுக்கள் என்று ஊரே கலைஞர்களால் கலைப்பொங்கல் காணும்.

வீட்டுக்கு வீடு பரியாரியார்கள் , அண்ணாவியார்கள்,  வாத்தியார்கள் என்று நிறைந்து விளங்கும் ஊர், அன்று நாட்டுக் கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள்  இன்றும் பெருமையாக அழைக்கப்படுகின்றார்கள் அவர்கள் ஏற்ற பாத்திரங்கள் மூலம், தருமன், வீமன் அருச்சுனன், இயமன், குதிரை, இராமர்,அனுமன், வேடன் என்று -   விதுரராக  நடித்த  பாலசுப்பிரமணியம்  ஐயா  அவர்களின் கலைத்தொண்டைப் பாராட்டி  இலங்கை அரசு  
அண்மையில்   மதிப்பளித்து சிறப்புச் செய்தது.

அமரர் முருகவேள் ஆசிரியர் பிரபல நாட்டுக்கூத்து ஆசிரியருமாவார் அவர்கள்  கலைக்கு  ஆற்றிய தொண்டு அளப்பரியது.  மற்றையவூர்   கலைஞர்களும் மதித்துப்  போற்றிய கலைஞராகத் திகழ்ந்தவர்.  இறுதிக்காலம் வரை நாட்டுக் கூத்தை பழக வந்த அனைவருக்கும் பேதம் பாராது கற்பித்தார்.

அமரர் காசிப்பிள்ளை பரியாரியாரின் பெயரைக் கேட்டால் அவரின் புகழை அறிந்தோர் ஒருகணம் எழுந்து நிற்பார்கள், பின்னர்  கொழும்பில் புகழுடன் விளங்கியா   வைத்தியர் அமரர்  சு . கனகரத்தினம் , கனடாவில் வாழும் மருத்துவர் க . ராதாகிருஷ்ணன் ,  மருத்துவர் கைலாயநாதன் போன்று இன்னும் பலர் புகழ்பூத்த விற்பன்னர்களாக வட்டூருக்கு பெருமை சேர்க்கின்றார்கள்.

சிங்கப்பூரில்  சுரங்க வழி  தொடருந்துப் பாதையை அமைத்து  வருகின்றார்  நம் வட்டூரின் பொறியாளர்  ச . பிரோசானந்த்.
இன்று நவீன  மருத்துவ விற்பன்னராக  கொழும்பில்  க. கிருஷ்ணபிரசாத் பீடு நடை போடுகின்றார்  .
ஆண்களுக்கு இணையாக  இன்று  பெண்களும்  கல்வி கேள்விகளில்  சிறந்து விளங்குகின்றார்கள்  .

  பல்கலைக் கழகங்களில்   விரிவுரையாளர்களாக ,  பாடசாலைகளில்   ஆசிரியர்களாக  நம்  வட்டூர் ஒள்ளிழைகள்   வெற்றிக்கொடி  கட்டி  பவனி வருகின்றார்கள்.  மாபெரும்  கல்விச்சமூகம்  வீறுநடை பயில்கின்றது  நம்  ஊரில் .

யாழ்/ இந்துக்கலூரியின்  கணிதபீட  ஆசிரியராகத்   திகழும் நவராஜா  பிரசாந்த்  நம்  வட்டு மண்ணின்  செல்வனே.



பலாலி  ஆசிரியர்  பயிற்சித் திணைக்களத்தில் நீண்டகாலங்கள்  கடமை செய்து  நாட்டுக்கு  சிறந்த ஆசிரியர்களை  உருவாக்கிக் கொடுத்தவர் ஆசிரியர்  பெருந்தகை  அமரர்  அரியரட்ணம்  அவர்களும்  வட்டூரவரே.

  இப்படியாக  நிறையப்பேர்கள்  பல வழிகளில்  ஊரின்  பெருமைக்கு   காரணிகளாக இருந்தார்கள்,  இருக்கிறார்கள். 

 கள்வர்கள்  குடிகேடர்கள்  இல்லாத  உத்தம இரத்தினங்களை கொண்டது  வட்டூர்.

  நல்லதை நினைத்து  நலத்தையே செய்யும்  இரத்தவழி 
வந்தவர்கள்  ஆதலினால்  அல்லவை  செய்ய  எண்ணுவதில்லை  வட்டூர் 
மக்கள் .

ஆசியாவின் அழகு மணித்தீவின் அற்புதமாம் ஈழவர் நாட்டின் வட்டூர் என்னும் தொன்மை மிகு  செவ்வூரில் நற்றமிழ் குடித்து
நலமே நம் வட்டூர்  மாமணிகள் வாழ்க வாழ்க வாழியவே .

( அடியேன் அறிந்த வரையில் போற்றுதலுக்குரியோர்களை  எழுதியுள்ளேன்   அறியாமல் விடுபட்டவர்களையிட்டு குறை கொள்ளாது  நினைவூட்டினால்  அவர்களது பெயர்களையும்  சேர்ப்பேன் )
தொலைபேசி / வாட்சாப்   - 0045/ 52699910

ஆக்கம்
அன்புடன்
ம . இரமேசு  

வாழும் நாடு 
டென்மார்க் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக