செவ்வாய், 2 செப்டம்பர், 2014

இது எனக்கும்  சேர்த்துத்தான்


அன்புடன்  அறியத்தருவது  - சுப்பர்  என்பதை  தமிழில்  அருமை என்று குறிப்பிடலாம்
ஸ்டைல்  என்பதை  எடுப்பு  எனலாம் ,  சுப்பர் ஸ்டைல்  = அருமையான எடுப்பு
நாம்  தமிழை வழமையில் (புழக்கம் ) கைக்கொள்ளாவிடில்  நாளை  அம்மா  என்றால் என்ன அர்த்தமென பிள்ளைகள்  கேட்பார்கள்.


  போத்துக்கேயர்  ஆட்சியின் பின்  பிறேசிலில்  500க்கு மேற்பட்ட  மொழிகள்  அழிந்து விட்டதாக மொழியாய்வாளர்கள் கூறுகின்றார்கள் - 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை மிகு இனிய மொழி  நம் தமிழ் அதை  தமிழருடன்  பேசவும் எழுதவும்  நாளும்  பயன் படுத்தவேண்டும், எனது வீட்டில் குத்தரிசிச்  சோறு இருக்க பக்கத்து வீட்டாரின்  சோறு எதற்கு,  அதுபோலவே  நமக்கு என்று  இனிய தமிழ் இருக்க எதற்கு  ஆங்கிலம்,  ஆங்கில  மக்களுடன் நம் மொழி தெரியாதவர்களுடன்  ஆங்கிலம் பேசலாம் தவறில்லை, நம்மவர்களுடன் எதற்கு வேற்று மொழி என்பதே  சிந்திக்க வேண்டியது , அடியேனும் சில சந்தர்ப்பங்களில் ஆங்கில  வருகைக்கு ஆங்கிலத்தில்  பதில்  போடுவதுண்டு  அதில்  கவனிக்கத்தக்க விடயம்  அனுப்புபவரும் எனது நண்பர்  அன்பானவர்  தமிழர்  என்பதே. இக்கட்டுரையை  அவர்கள்  தன்னை  சுட்டி  எழுதியிருக்கின்றானென  மறந்தும் கருதக்கூடாது என்று  ஐயாவிடம்  பணிவன்புடன்  வேண்டுகின்றேன் இது  பொதுவான ஆக்கம்.


 ஒரு ஆங்கிலேயர்  தனது  இனத்தவருடன்  பிரெஞ்சிலோ  இத்தாலியிலோ  பேசுவதில்லை .
பிரான்சில்  பார்த்திருப்பீர்கள்  எப்படி தங்கள்  மொழியை விட்டுக்  கொடாது  வாழ்கின்றார்களென்று   ஆங்கிலத்தை அங்கு  தொடருந்து நிலையத்தில் வானூர்தி நிலையத்தில் மற்று முக்கிய  மையங்களில்  மட்டுமே பேசுவார்கள் தங்கள்  வருவாயை முன்னிட்டு மட்டுமே . பயணச்  சீட்டு வாங்குமிடங்களில்   பேசுவார்கள்  அதுவும் ஒரு சிலரே  சிலர்  தெரிந்தாலும் தெரியாது என்பார்கள் அந்தளவுக்கு தங்கள் மொழிமீது அன்பு அக்கறை காதல்  - எனக்கு மொழி வெறியில்லை, எனது மொழி மீது  காதல்  அவ்வளவுதான்,  என்னை படித்தவன் பண்பானவன் என்று காட்டுவது எனது நடத்தையும் பண்பும் பழகும் விதமும் பழக்க வழக்கமுமே தவிர  பேசும் மொழியில்லை  - ஆங்கில  மொழியிலும்  கள்வன் காடன்  குற்றவாளிகள் கயவர்கள்  தறுதலைகள்  கெடுதி செய்வோருண்டு அதற்காக அவர்கள்  அறிவாளிகளா - நாம்  ஒரு அறியாமையின் மாயையில்  வாழ்கின்றோம் என்றால்  இதை  சிலர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும்  புரிவேன்.


 ஊரில்  படித்த காலத்தில் ஒருமுறை பாடசாலையில்  விளையாட்டு விழா நடந்தது  கல்லூரியின்  அதிபர்  ஆங்கிலத்தில் உரையாற்றினார்,  பின்னர்  பேச எழுந்த  போல் என்ற அமெரிக்க  ஆசிரியர்  தமிழில்  பேசினார்  எல்லோரும் மகிழ்ந்து கைதட்டினார்கள் , அவர் சொன்னது  இப்பொழுதும்  நினைவிலுண்டு  நான்  நிற்பது  தமிழர்கள் முன்னால்  எதற்கு ஆங்கிலத்தில்  பேச வேண்டும்  தமிழில்  பேசுவதே  பண்பு,  மக்களை  மதிக்கும்  செயல் என்றார்  கல்லூரி  அதிபருக்கு  முகம் கறுத்துவிட்டது  தனது  புலமையை  காட்ட  பேசிய  அதிபர்  தனது செயலுக்கு நொந்துகொண்டார் .


 இங்கு டேனிஷ்  மக்களிடம்  ஆங்கிலத்தில் அன்றில் வேறு மொழியில்  அதிபரோ அன்றில் அரசியலாளர்களோ  பேசினால்  மக்கள்  கடுங் கடுப்பை  வெளிக்காட்டுவார்கள் என்பதே நிதர்சனம் .  என்ன  நேரம் என்று  டெனிஸில் கேட்ட  சக  பணியாளரிடம்  நான்  3:15 என்று  ஆங்கிலத்தில்சொல்ல  அவர் கடுங் கடுப்பாகி நேராக  என்னிடம் வந்து நெஞ்சில்  சுட்டுவிரலால்  தட்டி,  ஹேய் மான் இது டென்மார்க்  உனக்கு டெனிஸ்  தெரியும்  பிறகு  ஏன்  ஆங்கிலத்தில்  சொன்னாய்  என்று கடுப்புடன்  கேட்க பதில் சொல்ல முடியாது  முழிசினேன் 2000 ஆம் ஆண்டில் டெனிஸ் தபால் திணைக்களத்தில்  பணியாற்றிய போது அந்நிகழ்வு  நடந்தது,   மறக்க முடியாத  சம்பவங்களிலொன்று .


 ஊடகங்கள்  திரைப்படங்கள்  அக்கறையின்றி  நம்மை அசுத்தப்படுத்துகின்றன  தமிழில் மட்டும்  பேசினால்  தமிழன்  படம் பார்க்க மாட்டான் இரசிக்க மாட்டான் என்னும்  இழிநிலையில்  இன்றைய காலம் நகர்கின்றதை  எல்லோரும் அறிந்தும்  தவறுக்கு உடன்பட்டவர்களாகவே  வாழ்கின்றோம்.


  உண்மைகள் சொன்னால்  சிலருக்கு உறைக்கும் என்ன செய்வது உண்மை  சொல்வதே    எழுத்தாளனுக்கு  அழகு  யாரையும்  புண்படுத்த  எழுதவில்லை  நம்  தவறுகளை  சுட்டுவதே  நோக்கம்  வேறொன்றுமில்லை   சிலர்  விடும் எழுத்துப்பிழைகளை கவனியாது ,  அச்சா  சொல்கின்றோம்  முகநூலில் ,  தவறை  சுட்டினால்  இவர் பெரிய பண்டிதரோ, நக்கீரரோ  என கோபச் சொல் வரலாம் என்ற பயத்தால்   யாரும் தவறுகளை சொல்லுவதில்லை  அதுவே  ஆங்கிலத்தை  சிறிது  தப்பாக எழுதினால் கிண்டல் செய்ய திருத்தம் செய்ய  முன்வருவார்கள்  நம்  சிங்கங்கள்   ஏனென்றால் சிலருக்கு  ஆங்கிலமே அப்பா  அம்மா அதே  உணர்வு  தமிழை  பிழையாக  எழுதுபவரிடமும்  வரவேண்டும் - தாய்மொழியை  துப்புரவாக எழுதத் தெரியாதவர்
அடுத்த மொழியை  சீராக  எழுதுவதில்  பெருமையில்லை  முதலில்  தாய் மொழியை  நன்றாக
சீராக தப்பின்றி  எழுதவேண்டும்  அதுவே பெருமை சிறப்பு  என்கின்றார்  பேரறிஞர் அண்ணா.


 ஆங்கிலநாட்டு   பிரதமரே  எழுத்து பிழையுடன்  சில ஆண்டுகள்  முன்பு  ஒரு  கட்டுரையை
வெளியிட்டார்  அதை  ஆங்கிலேயர்கள்  பெரிதாகக்   கண்டுகொள்ளவில்லை , இந்தியர்களும்  இலங்கையர்களுமே  எள்ளி  நகைத்தார்கள்.  ஆக நமக்கு ஆங்கிலப்  பிரியம் அதிகரித்து  நம்வீட்டு 
அமுதினை   புசிப்பதை  மறந்து விட்டோம், முகநூலில்  நானும்  பல  தடவை பதில் போட ஆங்கிலத்தில்  தட்டி  விட்டு பிறகு எனக்குள்  கேட்பேன்  என்னவருக்கு (தமிழருக்கு)எழுதுகிறேன்  பிறகு  எதற்கு  ஆங்கிலம்  என்றுவிட்டு பொறுப்புடன்  தமிழில்  எழுதிய  நாட்கள் அதிகம்  பொறுப்பும்  உணர்வும் இருந்தால்  எல்லோரும் நம் மொழியில்  உறவாடலாம்  நாம் பத்திரமாக  இருக்க பொறுப்புடன்  செயற்படுவது போலவே நம் மொழியையும்  பேண  பொறுப்புடன்  செயற்படுதல் வேண்டும் - வாழ்க  தமிழ்  வாழ்க வையகம் .


ம.இரமேசு
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக