சனி, 6 செப்டம்பர், 2014

இலங்கையில் நான்  பார்த்த  இடங்கள் .

பொதுவாக  எங்கள்  யாழ் மக்களுக்கு மற்ற இடங்களைப்   போய்ப்  பார்க்கவேண்டும் அறியவேண்டும்  என்ற ஆர்வம்  இரசிப்பு  இருப்பதில்லை, ஒரு சிலரே  ஊர் உலாத்தச்  செல்பவர்கள் , பெரும்பான்மையினர் பரந்த மனப்பான்மை இன்றி ஒதுங்கி வாழும்  சுயநலமிகளே வாழ்வை பாரமாக்கி நொந்து நொந்து  சுமந்து    தேவையில்லா விடயங்களுக்குக்  கட்டுப்பட்டு முக்கியத்துவம் கொடுத்து  பயனற்ற வாழ்வு  வாழ்பவர்களே நம்  யாழ் மக்கள்  பெரும்பாலானோர் -ஆடி அமாவாசைக்கு  கீரிமலை , நால்லூர்த் தேர்  சன்னதி தேர், நாகம்மாள் தேர்  மருதடித் தேர், சுழிபுரம் பத்திரகாளி அவியல் , பொன்னாலை  வரதராஜப்பெருமாள், யாழ் /பெருமாள் கோயில்  எள்ளெண்ணை எரிப்பு  இவ்வளவும்  கோயிலை  சாட்டிப் போன  இடங்கள் ,  பாடசாலை  சுற்றுலாவால்  முனியப்பர் கோயில் , டச்சுக்காரர் கோட்டை, கண்ணாடித் தொழிற்சாலை  (இடம்  ஞாபகமில்லை)  காங்கேசன்துறை  சீமெந்தாலை,  வல்லிபுரக்கோயில்,  வட்டக்கச்சி பண்ணை , இரணைமடு, பாலாவி, பேசாலை மீனுணவுத் தயாரிப்பாலை, மடுமாதா, மாமா  வாழ்ந்ததால்  நீர்கொழும்பு, வென்னப்பு,   பந்தடிச்சதாலை  ஊர்காவற்றுறை , வவுனியா, அப்பா  கொழும்பில் வேலை செய்ததால்  கோமகம , மகரகம, பனாகொட, கொட்டாஞ்சேனை வேறு இடங்கள்  சென்றதில்லை  - நிறையக் காசு வைத்திருப்பவர்களும்   மேலும் மேலும்  வயல் வீடு வளவு  வாங்கவே  விரும்புவார்கள் தவிர வாழ்வை கொஞ்சமும் சுவைத்து அனுபவிக்க  விரும்புவதில்லை,  கிணத்துள் இருக்கும்  தவக்கை  போலவே  வாழ்வு - எத்தனை  அழகான  நாட்டில் பிறந்தும்  பல  இடங்களை  சுற்றி  பார்க்க முடியவில்லையே என எனக்கு மிகவும் கவலை,  பொலநறுவை  சிவனொளிபாதமலை முன்னேஸ்வரம்  சிலாபம் புத்தளம்  திருமலை 
மட்டக்களப்பு  கண்டி   இன்னும் ஏராளமான  இடங்களுண்டு   கொழும்புக்குப்   போகும்போது 
குருநாகல்  தாண்டி  வரும்  இடங்களின்  அழகு  சிறுவயதில்  தொடருந்தில்  இருந்தபடி  அள்ளிப்பருகியது   நினைவிலுண்டு  பாதைக்கு  குறுக்கே போட்டிருக்கும்  கடவைக்கு அப்பால்  நிற்கும் பேருந்துகள்  துவிசக்கர வண்டிகள்  வெள்ளைத் தாமரைகள்
போல் புத்தகங்களை  சுமந்துகொண்டு நிற்கும்  பாடசாலை  மாணவிகள்  மாணவர்கள்  பச்சை  விரித்த  வயல்கள்  அவையூடாக  ஓடும்  சிறிய  பெரிய  நீரோட்டங்கள்  அதிலே  குறுக்குக் கட்டுடன்  மகிழ்ந்து
குளிப்போர் , எருதோட்டி உழும் உழவர்கள்   கையசைத்து மகிழும்  சிறார்கள்  என்னவொரு  அழகு  எல்லாம்  போச்சு .  குளிரும்  வரப்போகுது நடுங்கத் தயாராவோம் -  வாழ்க நலம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக