வியாழன், 18 செப்டம்பர், 2014

முன்பு  அலைகள்  பத்திரிகைக்கு  எழுதியது  புதிய  நண்பர்களுக்காக  இங்கு  இப்பொழுது  மீண்டும்

செந்தமிழ்க்காற்றில் சந்தண மணம்வீசும் குரலோன் டி எம் எஸ்.

March 23, 2013

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம் . சௌந்தரராஜன் என்றால் மிகையில்லை.
1922 பங்குனி 24 இல் தமிழர்களின் காதுகளுக்கு தேன்வார்க்கப் பிறந்தவரே எங்கள் குரலரசர் பாடகர் திலகம் டி எம் எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தரராஜன்.
வானத்தினுள் இறைவன் மறைத்து வைத்து தமிழுலகுக்கு எடுத்து வழங்கிய பொக்கிசப் பரிசு டி எம் எஸ் என்னும் மகா இசைமேதை.
அவரின் இன் குரலால் ஆனந்தமடைந்து இன்சுகம் கண்டவர்கள் கோடி அவர் இன்று 91 வயதை எட்டியுள்ளார் அவரை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.
புரட்சியும் எழுச்சியுங் கொண்ட ஈழத்தமிழர் வாழ்வில் புத்துணர்ச்சி பெற, புதுவேகமேடுக்க
ஐயா டி எம் எஸ் பாடிய புரட்சிப்பாடல்கள் எழுச்சியை தந்து உத்வேகத்தை அதிகரிக்கின்றது.
வெற்றிகளிலும் மாறுதல்களிலும் மனம் மகிழவும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் எம்முடன் கூட வருவது டி எம் எஸ் பாடல்கள்.
“துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி..” என்று அவர் பாடும் பாட்டை கேட்டால் சுருங்கிக்கிடக்கும் இதயங்கள் வீறுகொள்ளும் வீராவேசப்படும்.
இப்படியாக பல டி எம் எஸ் பாடல்கள் எழுச்சியையும் தெம்பையும் தருவனவாகும்.
செங்கதிர் உதிக்கும் இளங்காலை பொழுதினிலே எழுச்சிதரும் குரலுக்கு டி எம் எஸ் தவிர வேறு
எவரையும் நினைத்தும் பார்க்கமுடியாது.
எல்லாவித மனித உணர்வின் பரிமாணங்களுக்கும் தன்குரலால் வளம் சேர்த்தவர் டி எம் எஸ் மட்டுமே, அதுமட்டுமின்றி உருகாத உள்ளங்களை இறையிசையால் உருகச் செய்பவரும் அவரே.
கணீரென்று பாடும் அவர் குரல் கரைந்துமுருகும் எழுச்சியுமூட்டும் நெகிழ்ச்சியுங்காட்டும் இறைவன் அளித்த பரிசு அது என்று அவரே தன்னடக்கத்துடன் கூறியிருக்கின்றார்.
முருகனே தனது தெய்வம் என்று வாழும் அதியுன்னத முருக பக்தர் , தனது திறமைகள் அத்தனையையும் முருகன் திருவடிகளுக்கே சமர்பித்து வாழும் மாபெரும் பாடகர்.
திரையிசைப்பாடல்களில் அவர் காட்டாத பாவங்கள் ஏற்ற இறக்கங்கள் வளைவுகள் சுழிவுகள் கெஞ்சல்கள் கொஞ்சல்கள் இல்லை, அவரின் திறமைகளில் மகத்தானது.
எந்த கதாநாயகனுக்கு பாடுகின்றாரோ அக்கதாநாயகனுக்கு இசைவாக அதே குரலில் பாடுவதே கேட்ட மாத்திரத்தில் இது இன்ன நடிகருக்கான பாடல் என்று அவரின் இரசிகர்கள் நுட்பமாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரலினிமை அவருக்கே வாய்த்த கொடை , தொழில் கடுமையான கவனம் கதாபாத்திரத்தின் தன்மை பாடல் இடம்பெறும் சூழ்நிலை படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் மற்றும் பல விடயங்களை உள்வாங்கி அதற்கு கற்பனை கொடுத்து தன்குரலால் நடித்தே கொடுத்தார்.
அதன் சிறப்பே இன்றும் எத்தனையோ பாடகர்களின் பாடல்கள் வந்தும் அவர்பாடல்களே முந்தியிருந்துகொண்டிருக்கின்றது.
சிறிய குழந்தைகளும் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடல் போட்டிகளில் அவர்பாடிய பாடல்களையே பெரியபாணங்களாய் எடுத்து பாடியடிக்கின்றார்கள்.
முடிந்தால் இப்பாட்டுக்கு நிகராய் பாடு என்று சொல்லாமல் சொல்லுவதுபோலிருக்கின்றது அவர்கள் சிரத்தையெடுத்து பாடும்விதம், படிப்பறிவில்லா பாமரர்களுக்கு தனது பாடல்களால் தமிழைக்கற்றுக்கொடுத்த ஆசான் டி எம் எஸ் என்றால் மிகையில்லை.
இசையமைப்பாளர் நன்று என்று சொன்ன பின்பும் தனக்கு திருப்தி வரவில்லை என்றதால் மீண்டுமொருமுறை சந்தர்ப்பம் வேண்டி பாடிய பாடலே இன்று நாங்கள் கேட்டு மகிழும் எழுசிப்பாடலான ” நான் ஆணையிட்டால் ” என்ற பாடலாகும்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் பாடி படமாக்கப்பட்ட பின்பு காட்சியை பார்த்துவிட்டு பொருந்தாது என்று மறுத்து அண்ணன் டி எம் எஸ் பாடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சிவாஜியின் வாயசைவுக்கு ஏற்ப திரையை பார்த்து பாடிய பாடல் ” பாலூட்டி வளர்த்தகிளி ” என்ற பாடல் என்று மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசைவிழாவொன்றில் டி எம் எஸ் ஐயாவை புகழ்ந்தார்.
அப்படி வாயசைப்பை உள்வாங்கி உணர்வை கூட்டி பாடுவது மிகவும் நுணுக்கமான வேலை அதை ஒரு போட்டியாக எடுத்து சாதித்திருக்கின்றார் டி எம் எஸ் என்றே நினைக்கின்றேன்.
கலையுலகில் பெரும் புகழுக்குரியவர்களாக இருந்த சிலரில் டி எம் எஸ் பெயரும் என்றும் நினைக்கத்தக்கது போற்றத்தக்கது, அவரை வாழுங்காலத்தில் சந்தித்து உரையாட விரும்பினேன் அது 2009 இல் நிறைவேறியது.

அவரை சந்தித்தமையை எனது மிகப்பெரிய பாக்கியமென எண்ணுகின்றேன், அவர் என்னுடன் அதிகமாக ஆன்மீகத்தையும் தியானத்தையும் பற்றியே பேசினார், ஆங்காங்கே யான் கேட்ட சிலகேள்விகளுக்கு இனிமையாக பதிலிறுத்தார்.
சில பாடல்களை சில வரிகள் பாடியும் காட்டினார், சிவாஜி படப்பாடல்களில் “பாட்டும் நானே பாவமும் நானே ” பாடலையும் எம் ஜி ஆர் பாடல்களில் “நான் ஆணையிட்டால் ” பாட்டையும் தனக்கு பிடித்தமான பாடல் என்றார்.
முத்துக்குவியலான தனது பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றார் உண்மைதான் அவரின் குரல் கொண்ட அத்தனை முத்தான பாடல்களில் எதை கழிக்க முடியும், ஒன்றையொன்று மிஞ்சுவதாகவே அவரின் பாடல்கள் இருந்துகொண்டிருக்கின்றது.
ஈழத்து மக்கள்மீது நல்ல அன்பும் அபிமானமும் கொண்டுள்ளார், நான் அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் யாழ்ப்பாணத்தமிழில் வாங்கோ வாங்கோ என்று உரக்க கூவி வரவேற்றார்.
அவரின் வரவேற்பறை மிகவும் ஆன்மீகமயமானதாக நேர்த்தியாக அழகாக இருந்தது, அவரிடம் தான் பெரிய பாடகன் என்ற இறுமாப்போ கர்வமோ தலைக்கனமோ இம்மியளவும் இருப்பதாக என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.
இரு கைகளையும் நீட்டி என் தோள்களை அழுத்தி மிகவும் அன்பாக கதைத்தார், எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே அவரின் பேச்சில் அதிகமாக தெரிந்தது.
தியானம் செய்யும் முறைகளையும் சொல்லித்தந்தார், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றது பெரும் பாக்கியமே என எண்ணுகின்றேன்.
காரணம் அவரிடத்தில் ஒரு மகானுக்கான அத்தனை பக்குவமும் இருப்பதை நேரில் பார்த்து பேசிய பொழுது கண்டுகொள்ளக்கூடியதாகவிருந்தது.
இந்த வையகம் உள்ளவரை அவர் குரலும் நிலைக்கும் , வாழ்க பல்லாண்டு.
செந்தமிழ்க்காற்றில் சந்தண மணம்வீசும் குரலோன் டி எம் எஸ்.

ஆக்கம்
ம. இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக