தபால்
என் வீட்டு முற்றத்தின் பனையே நலமா
நான் இங்கு நலமே
என் வீட்டின் அருநெல்லி மரமே எப்படியிருக்கின்றாய்
நான் இங்கு சுகமே
என் வீட்டு பூவரசே சுகமாய் இருக்கின்றாயா
நான் இங்கு சுகமே
என் வீட்டு கிளுவையே எப்படியிருக்கின்றாய்
பக்கத்தில் உனது நண்பர்கள் அன்னமுன்னா
வாதனாராணி முருங்கை விளாத்தி எல்லோரும்
எப்படியிருக்கின்றார்கள் எல்லோரையும்
நலங் கேட்டதாகக் கூறவும்
தனித்து நின்று இனிக்கும் பழங்கள் தந்த
என் வீட்டு கொட்டங்காய் மரமே சௌக்கியமா
என் அன்பான கிணறே நலந்தானே
உங்களையெல்லாம் விட்டுவிட்டு
வெளிநாடு வந்ததில் வருத்தமே
உங்கள் அன்பை நீங்கள் செய்த உதவிகளை
நான் மறக்க மாட்டேன்
பூவரசே உன் தியாகத்துக்கு இணையில்லை
என் மாமா காங்கேசன்துறை சீமெந்து ஆலையில்
வேலை செய்யும் போது கரண்ட் அடித்து இறந்தார்
நீதானே அவரின் நெஞ்சாங் கட்டைக்கு எரிய
உன்னை அழித்து சுடலை சென்றாய் தியாகத் திருவுருவே
உன்னை வணங்குகின்றேன்
பனையே பனையே கோபம் வேண்டாம் உன்னை
குறைத்து மதிப்பிட முடியுமா நீயும் தியாகியே
வாழும் போதும் நிறையவே தருகின்றாய் இறந்தும்
எம்மை காக்க கூரையாய் நிற்கின்றாய் மறக்க முடியுமா
உன் சேவையை
என் அன்பான மரங்களே நீங்கள் தந்த பயனை மறவேன்
மனிதர் செய்ய மாட்டா உதவிகளை செய்து உயிர்காத்தீர்கள்
முருங்கையும் வாதனாராணியும் எங்கள் உணவாகி உயிர் காத்தவையே
எல்லோருக்கும் நன்றி நலமுடன் இருங்கள் அடுத்த தபாலில்
அன்பை நனைப்போம் - நன்றி வணக்கம் .
இப்படிக்கு
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக