சனி, 2 ஆகஸ்ட், 2014

சிறுவனின் றெயின்


            சிறுவனின்  றெயின்
                 யாழ்ப்பாணம்   - கொழும்பு 
                 (யாழ் /புழுதித் தமிழில் ) 

அப்பாவுக்கு  எண்ணெயிலை  பொரிச்ச  காரமான கடி வகையறாக்களெண்டால் காணும்  எல்லாத்தையும் மறந்துபோட்டு  அதை சுவைக்கிறதிலையே காலமோட்டுவார் - பற்றீஸ்  றோல்ஸ் கட்லட்  வடை   அவற்றை  நெருங்கின  சிநேகிதர்கள், நானறிஞ்சவரை - குழந்தைபோல  மனங் கொண்டவர்  மிகவும் அமைதியானவர் - கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும்  எண்ணுக்கணக்கு  தெரியாத வரையில அப்பாவோட  பயணம் செய்தனான்
  எப்பவும்  கோணர் சீற்தான் விரும்புவார்  றெயின் ஓட ஓட  விழுந்தெழும்பி  சீற் பிடிக்க மாட்டார்  நல்லபடியா  றெயின் நிண்ட பிறகே  ஆறுதலா கவனமா  ஏறுவார் - யாழ்ப்பாணத்திலையிருந்து  கொழும்புக்கு அம்மாவோட  பயணம் செய்யேக்கை பெரும்பாலா யாழ்ப்பாண ஸ்டேசனடி மட்டும்   மாமாவும் அவற்ற சிநேகிதரும் உதவியா வாறவை .

 மாமா   வேகமான  வீரமான  ஆள், கறுப்புத் தெறிக்கு தடையிருந்த காலத்திலை  ஆமிக்காரன் சட்டையிலை  கிடந்த  தெறியை புடுங்கவர கையை தட்டிப்போட்டு,  சட்டையை கழட்டிப்போட்டு வாடா அடிபடுவம் நான் தோத்தா நீ  தெறியை புடுங்கு எண்டு ஆமிக்கே  அதிர்வு கொடுத்த அடங்காத ஆள்,   தண்டவாளத்துக்கு  மற்றப்பக்கம்  போய் நிண்டு 
தைரியமா  றெயின் ஓட ஓட  ஏறி சீற்றை பிடிச்சுப்போடுவார்  பிறகு நாங்கள்  போய் இருப்பம்  அப்பா
மச்சானாரை  மெதுவா  பேசுவார்  உப்பிடி  ஆபத்தான வேலையை  பாராதையுமெண்டு - மாமா வராத நேரங்களில  அப்பா  மெதுவா ஏறி  இருக்கிறவையிட்டை   மரியாதையா பண்பா  சுத்தத்  தமிழிலை  கேப்பார்  ஐயா நீங்கள்  எதுவரைக்கும்  பிரயாணஞ் செய்கின்றீர்கள் எண்டு  அவையள் சொல்லுவின  பரந்தன் ,கிளிநொச்சி அல்லது வவுனியாவெண்டு,  உங்களுக்குப்  பிறகு  நான்  அமர   சம்மதமா  என்பார் அவையள் மெல்லிசா  சிரிப்பினம் ஓமெண்டு தலையாட்டுவினம்  அந்தப் பண்பான  உரையாடல்  அவர்களை அப்பாமேல்  கனிவு கொள்ள வைக்கும்.  அரக்கியிருந்து  எனக்கு  இருக்க கொஞ்சம் இடந்தருவினை   என்ன  படிக்கிறியள்  எங்க  எத்தனையாம்  வகுப்பு எண்டெல்லாம் கதை  கேப்பினை நான்  வெக்கத்தோடை  பதில் சொல்லுவன் - எனக்குவெளியில பாக்கிறதெண்டாக்காணும்
  ஆனால்  மெயில்  எடுத்தால்  இருட்டைத்தான்  பாக்கலாம்  அதுக்குள்ளாலையும் விளக்கு வெளிச்சம்  தெரியும்  அழகான  சின்னச் சின்ன  வீடுகளை பாத்து இரசிக்கிறனான்  எனக்கு  காலம்பிறை  உத்தரதேவியிலை  போறதே  பிடிக்கும் அப்பதான்  வயலுகள் காடுகள்  ஆடுகள் மாடுகள் எருமையள் குரங்குகள் குளங்கள் குட்டையளெண்டு  எல்லாத்தையும்  தலை  திருப்பாமல் யன்னலுக்குள்ளாலை பாக்கலாம்,லைட்போஸ்ட்டுகள் ஒவ்வொண்டையும்   எண்ணிக்கொண்டு
 போறதிலை   ஒரு  சந்தோசம்  கொழும்பிலை  வீட்டை போனதும்  கண்ரெண்டும்
காத்தடி வாங்கினதால கொஞ்சம் நோகும்  படுத்தெழும்பின பிறகு அடுத்தநாள்  சரியாகிவிடும்.

அங்காலை  இங்காலை  இருக்கிற  எங்கண்டை  ஆக்களை பாத்தா  அவையளின்ர முகத்திலை ஒண்டரைக்கிலோ செத்தல் மிளகாய் தெரியும்  எரிக்கிற அலட்சியப்பார்வை  ஈ  எறும்பு
இலையானை  பாக்கிறது போல  ஏதோ  தாங்கள்தான்  உலகக்கடவுள்  எண்டதுபோல  நினைப்பு
அவையளின்ர  பார்வையிலை தெரியும், எரியாத  குறையா அவையளுக்குள்ளாலை  வாத்துறூம்
போய்வாறனான், நானும் அயன் பண்ணின சேட்டு காச்சட்டை சப்பாத்தோடதான் வடிவா   போறனான்
அப்பிடித்தான்  அம்மா  வெளிக்கிடுத்தி விர்றவ பிறகு ஏன்தான்  அவையள்
அப்பிடி  விசர்ப்பார்வை  பாக்கிறவையோ தெரியாது, மறந்தும்  சிரிக்கத்தெரியாத  மனிசர்
எப்பிடித்தான்  குடும்பத்திலை சந்தோசமா வாழ்ந்திச்சினையோ  எண்டு நினைக்கிறன்.

நாவற்குழி கொடிகாமம் சரசாலை  அங்கினையுக்குள்ள  போனவுடனை  சிலவேளை  றெயின் கொஞ்சநேரம்  நிக்கும்  சனமெல்லாம்  என்னாச்சுது  எதாச்சுதெண்டு  பரபரக்கும்  நான்  பகிடியா
நினைக்கிறது  றெயின்  ஒண்டுக்கிருக்க போவிட்டுதாக்குமெண்டு திரும்பிவந்து ஓடுமாக்குமெண்டு
சிலவேளை  யாழ்ப்பாணம் நோக்கி  ரிவேர்ஸ் அடிக்கும்  வேலையளுமுண்டு  அனுபவப்பட்டிருக்கிறன்
அப்பாவிட்டை  ஏனப்பா  பின்னால  போகுதெண்டா  அவர்  ஒரு கணிப்பிலை  சொல்லுவார்  இந்த  றாக்கிலை  முன்னுக்கு  றெயின் ஒண்டு  வருகுது போலை  அதுக்கு  இடங்கொடுக்க  இது  பின்னாலை
போகுதெண்டு  எனக்கு பெரிசா அப்பா  சொல்றது என்னெண்டு  விளங்கிறதில்லை  நான்  எப்பவும் ஒரு ரியூப்  லைட்டுத்தான் உடனை  விளங்காது  ஆனா  சரியா பிடிச்சனோ   பிறகு  றக்கன் . அப்பா  சொன்னமாரி  எங்கட  றெயின்  ரிவேர்சில போய் நிக்க  மற்றப்பக்கம்  யாழ்ப்பாணம் நோக்கி  றெயினொண்டு போகும் அப்பதான் அப்பா  சொன்னது  விளங்கும் - இன்னும்  நிறைய  எழுதலாம்  உங்களுக்கு  அலுப்பாகும் வாசிக்கவெண்டதாலை  இதோடை  நிப்பாட்டுறன் - றெயினிலை   கண்ட
அழகியை  மருதடிப்பிள்ளையார்  கோயிலிலை கண்ட அனுபவம், கம்பஸ் பெடியன் கச்சானெண்டு கோதைத்தந்து  ஏமாத்தியது, குருநாகலுக்குப் பிறகு வாற இயற்கையின் காட்சியழகு, அம்மம்மா சிங்கள கிழவியோடை  முறைச்சது, அது பெரும் சிரிப்பு இப்பிடி நிறைய  இருக்குது   -- அதெல்லாம்
இன்னொருநாள் எழுதுறன்   பிறகு வேறை  விசயங்களையும்  பாப்பம்  - வாறனுங்கோ  - வாழ்க  நலம்

ம.இரமேசு -  தொன்மார்க்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக