சனி, 9 ஆகஸ்ட், 2014

அன்று உறைத்தது  இன்று இனிக்கின்றது

அம்மாவிடம்  வாங்கிய  குட்டும்  நுள்ளலும் அடியும்  அன்று நொந்தது  இன்று அதை  நினைக்கையில்
இனிக்கின்றது - வின்சரில்  புதிதாக வந்து ஓடிக்கொண்டிருந்தது  "குருதட்சணை "  சிவாஜி யின்  இரசிகர்களான  அம்மாவும்  அப்பாவும்  மாமாவும்  அதை பார்க்க  ஒரு நாள்  முடிவு செய்து  காலையில்  தயாரானார்கள்  தளையசிங்கப்பெரியப்பாவின்  காரில்  முதலில் கீரிமலை சென்று  அங்கு
நீராடி  சமுத்திர ராணியின்  அழகில் மயங்கி  கட்டி சென்ற  உணவுப்பொதிகளை  கடையொன்றில்
அனுமதிபெற்று  உண்டு கொண்டிருக்கையில்   சிறுவன்  நான்  சற்று சோற்று பருக்கைகளை  சிந்தி உண்கையில்  இரகசியமாக அம்மாவிடம்  நுள்ளல் வாங்கி  நொந்து  பின்  கவனமாக  உண்டு முடித்தேன் . கீரிமலை  சாப்பாட்டு  கடைகளுக்குள்ளேதான்  வரப்போகும்  படங்களின்  பெரிய
அழகான  விளம்பர சுவரொட்டிகள்  இருக்கும்  அதை  பார்த்து  இரசிப்பதில்  ஏக பிரியமுண்டாகும்
விரும்பியோ விரும்பாமலோ   பிறந்து வளர்ந்த காலம் முதல்  இன்றுவரை  மனிதர்களின்  மனங்களை பிடித்து   ஆழமாக உள்ளுக்குள் கவர்ந்திழுக்கும்  ஆழியாகிவிட்டது  திரையுலகம், அதன்  சூறாவளியில்  ஆடாதார்  சொற்பமே .

தளைய சிங்கப் பெரியப்பா  வெளியில்  தூரமாக  நிற்பதை  கவனித்துவிட்டு  இதுதான்  தருணமென
நினைத்து காரின்  கோணை ஒரு  அமர்த்து  அமர்த்த வீறிட்டது  போப்  என்ற  ஒலி,  பெரிய மகிழ்வு
கிட்டே வந்து நாக்கை  நரும்பியபடி டேய்  வடுவா  என்ன குழப்படி என்றார்  அதற்கும் ஒரு சின்ன
குட்டு  அம்மாவிடம்  வாங்கியிருந்தேன், சின்னச்   சின்ன குழப்படிகளுக்கும்   மெல்ல மெல்ல  அம்மாவிடம்  அடிவாங்கி  வளர்ந்தேன் . மிகவும்  கண்டிப்பானவராக  இருந்தார்கள்  எனது தாயார்.

காரில் இருந்தபடி  மற்ற  ஊர்களின்  தெருக்கள் மரங்கள்  குன்றுகள் குழிகள்  கட்டிடங்கள்  நடைபாதை  மக்கள்  விளம்பர சுவரொட்டிகள்  பதாகைகள் துவிச்சக்கர வண்டிகள்  பேருந்துகள்  கனரக வாகனங்கள்  என்று  யாவற்றையும்  இரசித்து  இரசித்து  உள்ளுக்குள்  போட்டேன்  அதன் விளைவே இன்று  இந்த எழுத்து -  தெல்லிப்பளை (ழை) எந்த  ளை  சரியானது என்று  பெரிய  ஆராய்வுகள்  இன்னொரு நண்பரின் முகநூலில்  பேராசிரியர்கள் துணையுடன்  நடக்கின்றது  முதலில்  ழை  தான்  சரியென்றார்   ஒரு  பேராசிரியர்  பின்பு  இல்லை  ளை தான்  வருமென்று  இன்னொரு  பேராசிரியர் ---   களை  கட்டுகின்றது  ழை  ளை   விவகாரம்  சரி அதில்  இருந்து  செய்திக்கு  வருவோம் -----

தெல்லிப்பழை   சந்தியின் பரபரப்பு  பார்க்க  உள்ளம்  மகிழும்  சந்தியை  கடக்கும்  பேருந்துகள் தட்டிவான்கள், சிறிய வண்டிகள் கடகங்களுடன் குந்தியிருந்து ஒருகையில்  குழைகளுடன்  ஒடிக்கப்பட்ட  தண்டுகளினால்  இலையான்களை  விரட்டியபடி  மாம்பழம்  விற்கும்  ஆச்சிமார்கள்  சயிக்கிலில்  கட்டப்பட்டிருக்கும்  மீன் பெட்டி,அதை  சூழ்ந்து நின்று    பேரம் பேசி  தர்க்கப்படுவோர் யூனியன் கல்லூரி அருகில் பாசத்துடன் அணைக்கும் மரநிழல்  அதில் இளைப்பாறும் முதியவர்கள் அவர்கள் வாயில் மென்று வெளியில்  இறைக்கும்  சிவப்புநிற  வித்திலை துப்பல் ,   வழிப்போக்கர்கள் பின்னிய கூடைக்குள் நிமிர்ந்தபடி  தன்  மூடி  காட்டும் சுடுதண்ணீர் போத்தல்  அதை கையில் ஏந்தியபடி   வைத்தியசாலைக்கு  வேறு  அலுவல்களுக்கு  செல்ல  பேருந்துக்காய் காத்து நிற்போர்  தேனீர்க்கடைகள் அங்கிருந்து  தேனூற்றும்  டி எம் எஸ்  சுசீலா
குரல்கள்  வானொலியில் முழங்கும்  கே எஸ் ராஜா  மற்ற அறிவிப்பாளர்கள்  சல் சல்லென்று
நடைகட்டும்  மாட்டு வண்டிகள் , கழிவுகளை கொத்தியுண்ண  வேகம் காட்டும் காகங்கள்
      மதில்களில் அதில்  வெகுவிரைவில் வருகின்றது என ஒட்டப்பட்டிருக்கும்  எம்ஜிஆர்   சிவாஜி  ஜெய்சங்கர்  ரவிச்சந்திரன்  திரைப்பட   விளம்பரங்கள்  அதிலேயே  அதிக நேரம்  கண்ணோடும்  நிலைமை  ஆகா ஓகோ  அதை  அனுபவித்தவர்களுக்கே புரியும் .

தெல்லிப்பளை சந்தியில்  கார் சிறிது நேரம்  நிற்க  விரைவாக வெளியில் கடையொன்றுக்கு சென்று
சில பொருட்களை  வாங்கி வந்தார்  மாமா அந்த  இடைவெளியுக்குள்  மேற்சொன்னவைகளை  இரசனையுடன் புத்திக்குள் பொறுக்கி போட்டிருந்தேன்
"வின்சர் " வந்தோம்  இரசிகர்கள் பெருக்கால்  திரையரங்கு  வழிந்து காணப்பட்டது  ஒருவாறு  மாமா 
பற்றுசீட்டுகளை  வாங்கி வர   எல்லோரும்  உள்ளே  சென்று அமர்ந்தோம்  உள்ளுக்குள்ளும் நிறைந்திருந்தது   இரசிகர்கள்  வெள்ளம்  படம்  தொடங்க  சில நிமிடங்கள் முன்பு  மாமா  வாங்கிவந்த
பொருள்கள்  நிறைந்த பையுக்குள்ளால் ஒரு  சுருட்டிய சரையை   அம்மா எடுத்து  அதை சுற்றி கட்டப்பட்டிருந்த சாக்குக்  கயிற்றை இளக்கி  சரையை  திறந்தார்கள்   குண்டு குண்டாக  மஞ்சல் கடலைகள்   உள்ளே  இருந்தது கொஞ்சம்  எடுத்து விட்டு அப்படியே  என்னிடம்  சரையை  தந்துவிட்டார்கள் நான்  கடலையை  இஸ்டம்போல்  சுவைத்தபடி  இருக்கையில்  கைதவறி  கடலைச்  சரை  கீழே  விழுந்துவிட்டது  குடு குடுவென்று கடலைகள்  கீழ்நோக்கி கலரிவரை  ஓடியிருக்கும்  என்று நினைக்கின்றேன் பலத்த நுள்ளல் தொடையில்  விழுந்தது  அது  இடைவேளை  சோடா வரை  நிலைத்தது  அந்நிகழ்வு நெஞ்சில்  நிலைத்தும் விட்டது .

நினைவு
ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக