திங்கள், 25 ஆகஸ்ட், 2014


அடுப்படி வேதம்

அழகிய  வடிவு  நெற்றியில்  குங்குமம் சிரிக்கும்
வார்த்தையில்  கனிவுமிருக்கும்  கண்டிப்புமிருக்கும்
நெஞ்சில் கருணையிருக்கும் கைகள்  பாதுகாக்கும்
அவள் பெயர்  அம்மா    அவள் அதிகம் இருப்பது
உயிரைக்காக்கும்  சேவையில் ஆம்  அடுப்படியில்
 அதுவொன்றும்  பழுதான இடமல்ல புனிதவிடம்
அவ்விடம் இன்றில்  அரசனுமில்லை  புலவனுமில்லை
நாடுகாக்கும் வீரர்களுமில்லை  ஒன்றுமேயில்லை
அப்பு  இஞ்சவா  அம்மாவுக்கு  தேங்காய் திருவித்தா
வெங்காயம்  உரிச்சுத்தா என்று அன்புக் கட்டளையிடுவாள்
வார்த்தையை  தட்டினால்  அவளும்  தட்டுவாள் தடியால்
சொல்வதை செய்தால் கேட்பதெல்லாம்  தருவாள்
பாடுவாள்  பண்பெல்லாம்  சொல்லுவாள் 
செய்ய வேண்டியது  கூடாதது  எல்லாம்  அமைதியாக
சொல்லித்தரும் பட்டம் பெறாத  விரிவுரையாளி அம்மா
ஒலைக்குடிசைக்குள்ளும்  இருந்து  நல்லது  சொல்வாள்
ஓடுபோட்ட  உயர்ந்த  வீட்டிலிருந்தும்  உபதேசிப்பாள்
பொய் சொல்லக் கூடாது  என்பதே  அவள்  கற்றுத்தரும்
முதற்பாடம்  பெரியோரை  பணி  இரண்டாம்  பாடம்
திருடக்கூடாது  மூன்றாம்  பாடம்   மேலும் மேலும்
 புகையை  ஊதி  ஊதி புத்திக்கும்  ஊதுவாள் நன்மையை
உன்னை  தேடி வருபவர்  யாராக  இருந்தாலும்  உபசரி
கோள் மூட்டக்கூடாது   என்று  உரக்கச்  சொல்வாள் 
பிறர்  பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை அழுத்தமாக
நெஞ்சில் பதிப்பாள்    ஏழைகள்  இல்லாதவர்கள்  கேட்டால்
கொடுத்து  உதவவேண்டும்  என்பாள்  மது அருந்தாதே
புகைக்காதே  என்று முதலில்  சொல்லுபவள்  அம்மாவே
அவள்  ஒரு  அடுப்படி  பல்கலைக்கழகம்  என்றால்
மறுப்பவர்கள்  எவரோ  எவரோ .

ம.இரமேசு   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக