சனி, 30 ஆகஸ்ட், 2014

பூராசாத்தியின்  ஆசை

மாம்பழத்தி  அங்கம்  பார்ப்போர்  மனசை பங்கம் பண்ணும் , ஒரு நாள்  காலை  யாழ்ப்பாணம்  போக
பஸ்சுக்காக (பேருந்து)  நின்றிருந்தேன்  அழகாக  நடந்து வந்து  என் பக்கம் நின்றவ  தன்  தோளை
பார்க்க  சொல்லி காட்டினா  எனக்கு கூச்சமோ   கூச்சம்  தனக்கு  ஒப்பரேசன்  செய்ததாம்  அந்த  அடையாளம்  தெரியுதோ என்று கேட்டா   நான் இல்லை என்றேன்  அவவுக்கு பெரும் சந்தோசம்
முகத்திலை   நடனமாடிச்சு .

அடுத்தவேளை  என்ன  சமைக்கிறது  என்ற  மனவோட்டத்திலை   சங்கக்கடைக்கு  போகும்
ஆச்சிகளை வயசு போய்விட்டுதே  ஆரோக்கியமும்  குன்றிவிட்டுதே என்ற நினைப்புடன்  தள்ளாடி நடக்கும்  அப்புகளை  நிற்பாட்டி  நான் வடிவா இருக்கிறனே  என்று கேட்டு  தன் அழகை  பிறர்வாயால்  பரிசீலிப்பது பூராசாத்தியின்  வேலை ,  அதுவே     அவவின்    நடைபாதை  உரையாடல் .

நாய்க்கு  பயந்து பொட்டுக்குள்ளாலை  ஓடிவந்து  மூச்சுவிடும்  கோழிபோலவே  பூராசாத்தியின்
தோற்றம்  அவவுக்கு தான் பெரிய  அழகியென்று  தனக்குள்ளை  நினைப்பு  மற்ற  பொம்பிளையள்  தன்னை விட  அழகா  இருந்தால்  நெருப்புக்  கோபம் வரும், வலியப்  போய்   பஸ்சுக்கு  நிற்கும்  அழகான  பெண்களுக்கு பக்கத்தில் நின்று வம்பிழுப்பது  பூராசாத்திக்கு  நன்றாகப்   பிடிக்கும்  அதனால்த்தானோ என்னவோ பூவை  கண்டால்  பாவைகள்   தூரச்   சென்று  நிற்பார்கள் - மாம்பழத்தை   கண்டால்   பூவுக்கு  பிடியாது,  மாம்பழம்  ஜெயலலிதாவின் தங்கையோ  என  பார்ப்போர்  கேட்கும் முகச்சாயல்  கொண்ட  இளங்கொடி ,  நிறம் எலுமிச்சை   உதடு செவ்விளனி  பேச்சு  பழனி பஞ்சாமிர்தம் .
 
கடைக்கு  குடையை  பிடித்துக்கொண்டு  போன  ராமப்புவின்ர  குடையுக்குள்ளை  போய்
நான் வடிவா  இருக்கிறனே  என்று  பூராசாத்தி  கேட்க மனிசன்  திடுக்கிட்டு  முழிச  பூ
உறுக்கி  கேட்க  மனிசன்  சிரிச்சுக்கொண்டு  ஓமெண்டு  தலையாட்ட  திருப்தி அடையாத
பூராசாத்தி  வாயை  திறந்து  சொல்லணை  என்று  ஆய்க்கினை  குடுக்க  மனிசன்  நல்ல்லா
இருக்கிறாய்  பிள்ளை  எண்டதுக்கு  பிறகே  பூவுக்கு  திருப்தியானது  தன்னை  வாயாலை
பாராட்டவேணும்  என்பதே  அவவின்ர   எதிர்பார்ப்பு, ஆசை.   ஆசை  எந்தெந்த  வடிவிலையெல்லாம்  சுத்துது ஆட்களிடம் பார்த்தீர்களா  நண்பர்களே   -  பொன்மனங் கொண்ட  மக்கள் எல்லோரும்  புவியில் அழகே,  யாரும் யாருக்கும்  குறைவில்லை  நெஞ்சத்து அழகே  உண்மையான  அழகு  - வாழ்க வாழ்க

உண்மையையும் கற்பனையையும்  கூட்டியவர்
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக