ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014


அராலியிலிருந்து  யாழ்ப்பாணம்  நகர்வரை - நான்  பார்த்த பார்வைகள் 

(இது ஒரு  காலத்தின்  நினைவு  -  1970 -1985 )




அராலி மயிலியப்புல கந்தன்,  அவன் முற்றத்தின் இருமருங்கிலும்  பரவி விரிந்து  கருணை காட்டும்
அரச மரங்கள் அதனிடையே  நெஞ்சை நிமிர்த்தி  நிற்கும்  நாடக மேடை  அருகே  காளையர்
களம்  (விளையாட்டு மைதானம் ) அதனருகில்  பாழடைந்த  கேணி  அதன்  கட்டில்  இருந்து 
கதைபேசும்  வாலிபர்கள்  - கடவுள் இல்லை என்று  பெரியாரின் தத்துவம்  பேசுவோருக்கும்
குந்தியிருக்க அடைக்கலம் கொடுத்தது  கோயிலின் கேணிக்கட்டே ,  இரண்டு  பிள்ளைகளை
பெற்று வாழ்வில் அடிவாங்கியதும் அப்பனே முருகா என்று  பக்தியில்  உருகிய பெரியார்
நேசர்கள்,   விரிந்து  வேடிக்கை  காட்டும் அழகிய  வயல்கள்  அவைநடுவேஅமைந்திருக்கும்  பெரிய குளம்  சற்று தள்ளி  வளைந்தோடும்  வழுக்கையாறு அங்கிருந்து  நோக்க  நிமிர்ந்து நிற்கும் முருகமூர்த்தி  கோயிலின் தேர்க்கூடு,  சகடையில் அமர்ந்து சகலதும் அலசும் சண்டிகள்  கச்சான் விற்கும்  பாலாச்சி  மாடு விற்கும் கனகன்   மதவடியில்  குந்தி முந்தி முந்தி  அரசியல் பேசும்  முதியோர்  நேவி றக்கை (கடற்படை வண்டி) கண்டு ஓடி ஒளியும் பெடியள் செட்டியாரப்புவின்  சைக்கில் கடை  அங்கே  உரிச்ச  கிடாய் போல  ஒப்பிறேசனுக்கு (திருத்த) தொங்கும் பழைய றலி  சைக்கில்  யாழ்  போகும்  பேருந்தும்   காரைநகர்  போகும்  பேருந்தும் மதவடியில் சந்திக்க பக்கமாக   யன்னலால் அருகருகே றைவர்மார் (ஓட்டுனர்கள் )ஏதோ  குசுகுசுப்பர் , செம்பாட்டான் (செம்பாட்டு நிலத்தில் இருந்து வந்தவர்) மாடுகள்  கொண்டுபோக வந்து  பேருந்துக்கு பின்னால் மாடுகளுடன்  நின்று  புறுபுறுக்க (எரிச்சலில்  தனக்குள் பேசிக்கொள்வது) நகரிலிருந்து  லவுஸ்பீக்கர் (ஒலிபெருக்கி) கட்டிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து விளம்பரம் செய்யும் தியேட்டர் வான் (திரையரங்கு வண்டி) அதன்  பின் ஓடும்  சிறுவர்கள்  வழுக்கையாறு சங்கமிக்கும் அராலிக் கடல்  அதன் கொள்ளையழகு  சற்று  தொலைவில் அமைதியாக படுத்திருக்கும்  உப்பளம்  அதன் பக்கம்  கல்லுண்டாய் வைரவர்  அங்காலே  இரவில்  நகை பறிப்பார்கள் திருடர்கள் என்று பேரெடுத்த  மாட்டொழுங்கை  பிறகு  காக்கை தீவு அதன்  மிடுக்கான கடற்கரை சந்தை  அழகாக கடலில் வரிசையாக  மிதக்கும் நாவாய்கள்  தொலைவில் கடற்கரையை அண்மித்து கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள்  அவை   எரிந்தபடி புகைகிளப்பும்  அசுத்த நாற்றம்  வலது கைபக்கம்  நாவந்துறை  நேரே  ஓட்டுமடம்  இடையில் பொம்மைவெளி  அங்கு  நிறைந்திருக்கும்  முஸ்லீம்  மக்களின் குடியிருப்புகள்


 ஓட்டுமடத்தை அடையாளம்  காட்டும் பச்சை பாசி படர்ந்த  சிறிய நீர்ப்பரப்பு  ஓட்டுமட
சந்தி  மதில்களை நிறைத்திருக்கும்  திரைப்பட  விளம்பர சுவரொட்டிகள்  தேநீர்க்கடை,  மேலே
ஐந்து சந்தி -  யாழ்ப்பாணநகரின்    திரையரங்குகளே  பெரிதான  கட்டிடங்களுடன் மைய நகரையாளும்  வின்சர்  லிடோ  ராஜா  மூன்றும்  கூப்பிடும்  தூரத்தில் அமைந்த  திரையரங்குகள்  சற்று  தொலைவில்  வெலிங்கடனும்  ராணியும்  ராணிக்கு முன்னால்   யாழ் மத்திய  பேருந்து நிலையம்
அதை  அணைக்கும் வரிசையில்  தேநீர்க்கடைகளும் உணவு விடுதிகளும்  அழகிய  பட்டணம்  யாழ்ப்பாணம் - நல்லூர்  கந்தன் கோயில்  அதன்  அழகு, தூய்மை  நல்லூர்  செல்லும் வழியில்  வரும்  ஆனைப்பந்தி  அதை  காக்கும்  வீரகாளியம்மன் கோயில்  நல்லூர்  திருவிழாக் காலத்தில்  அங்கே போடப்பட்டிருக்கும்  உயர்ந்த  தாகசாந்திப்பந்தல்கள் நல்லூர் வாசிகளின் நெஞ்சம் போல்  உயர்ந்திருக்கும் அழகைக் காணலாம் - எல்லா ஊர்களிலுமிருந்தும்   கூடும்  தமிழர்கள் யாழை  நிறைக்கும் காட்சி ஆனந்தம்  ஆனந்தம் -   இது ஒரு  காலத்தின்  நினைவு - இன்று பல  மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் .


ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக